கோவையில் முன்னறிவிப்பின்றி டிஜிட்டல் கேபிள் அறிமுகம்: செட்டாப் பாக்ஸ் பொருத்தினால் மட்டுமே பார்க்க முடியும்

கோவையில் முன்னறிவிப்பின்றி டிஜிட்டல் கேபிள் அறிமுகம்: செட்டாப் பாக்ஸ் பொருத்தினால் மட்டுமே பார்க்க முடியும்
Updated on
2 min read

கோவையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அரசு கேபிள் இணைப்புகளில் திடீரென சேனல்கள் அனைத்தும் மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, பல சேனல்களின் ஒளிபரப்பு முற்றிலுமாக தடைபட்டுள்ளது. அரசு கேபிளில் டிஜிட்டல் முறை புகுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்றும், செட்டாப் பாக்ஸ் கட்டாயம் எனவும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.

நாடு முழுவதும் தொலைக்காட்சி சேனல்கள் கம்பிவடம் (கேபிள்) மூலமும், டிடிஎச் மூலம் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதில் பழைய கேபிள் ஒளிபரப்பை டிஜிட்டலாக மாற்றி மத்திய தகவல் ஒலி, ஒளிபரப்புத்துறை அறிமுகப் படுத்தியது.

இதையொட்டி தமிழகத்தில் சென்னையிலும், அதைத்தொடர்ந்து தற்போது கோவையிலும் டிஜிட்டல் சேவை அறிமுகமாகி உள்ளது. மெல்ல மெல்ல இச்சேவை அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளதாக அரசு கேபிள் நிறுவன அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் முன்னறிவிப்பின்றி டிஜிட்டல் சேவை அறிமுகமாகி யுள்ளதாலும், அதற்கு கட்டாயமாக செட்டாப் பாக்ஸ் பொருத்த வேண்டுமென்பதாலும் பொதுமக்களிடையே குழப்பம் நிலவுகிறது.

சோதனை முறை

கேபிள் டிவி ஆபரேட்டர் ஒருவர் கூறும்போது, ‘அரசு கேபிள் டிவி நிறுவனம் அனலாக் முறையில் சேனல்களை ஒளிபரப்பி வந்தது. குறிப்பிட்ட அலைவரிசையில் 100 சேனல்கள் கிடைத்தன. ஆனால் டிஜிட்டலில் 1000 சேனல்கள் வரை ஒளிபரப்ப முடியும். ஆனால் செட்டாப் பாக்ஸ் தேவை.

கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் சட்டம் திருத்தப்பட்டு, டாஸ் (டிஜிட்டல் அட்ரசபிள் சிஸ்டம்) என மாற்றப்பட்ட பிறகு, டிஜிட்டல் மயமாக்கலுக்குத் தேவையான பன்முனை அமைப்பு உரிமம் கேட்டு கடந்த 2012-ல் தமிழக அரசு விண்ணப்பித்தது. ஆனால் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு இந்த உரிமம் கிடைக்காது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மட்டும் இந்த உரிமம் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

உரிமம் கிடைத்தால் மட்டுமே அரசு கேபிள் நிறுவனம் முழுமையான டிஜிட்டல் சேவையை வழங்க முடியும்.

அனலாக் முறையில் உள்ள சில சேனல்களை தூக்கிவிட்டு, அதற்கு பதிலாக டிஜிட்டல் சேனல்கள் புகுத்தப்பட்டுள்ளன. அவற்றை சாதாரண கேபிள் இணைப்புகளால் ஒளிபரப்ப முடியாது. அதனாலேயே ஒரு வாரமாக இடையிடையே பல சேனல்கள் தடைபட்டுள்ளன. செட்டாப் பாக்ஸ் பொருத்தினால் அவை ஒளிபரப்பாகும்’ என்றார்.

வீணாகுமா?

டிஜிட்டல் முறை அறிமுகம் குறித்து பொதுமக்கள் அறியாத நிலையில், செட்டாப் பாக்ஸ் விற்பனை கோவையில் பரவலாக நடைபெற்று வருகிறது. அரசு கேபிள் நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ்களை விற்க ஆபரேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது

மேலும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம் கிடைக்கும் முன்பாகவே சென்னையிலும், கோவையிலும் டிஜிட்டல் முறையில் சேனல்கள் ஒளிபரப்பு தொடங்கியுள்ளன. ஒவ்வொருவரும் சுமார் ரூ.2 ஆயிரம் வரை செலுத்தி செட்டாப் பாக்ஸ்களை வாங்கி பொருத்தி வருகின்றனர். ஒருவேளை அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு ஒளிபரப்பு உரிமம் கிடைக்காவிட்டால், செட்டாப் பாக்ஸ்கள் அனைத்தும் வீணாகும் வாய்ப்பும் உள்ளதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறுகின்றனர்.

கோவையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘அனைத்து மாநகராட்சிகளிலும் டிஜிட்டல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையைத் தொடர்ந்து கோவையில் சில நாட்களாக டிஜிட்டல் சேனல்கள் ஒளிபரப்பாகின்றன’ என்றார்.

ரூ.1912-க்கு செட்டாப் பாக்ஸ்

அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கோவை மாவட்ட அலுவலக அதிகாரிகள் கூறும்போது, ‘சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் முதல்முறையாக இந்த சேவை அறிமுகமாகியுள்ளது. உடனடி உத்தரவு வந்ததால், மக்களிடம் இதை முறையாக அறிவிக்க முடியவில்லை. இதில் அனலாக் முறையில் 86 சேனல்கள், டிஜிட்டல் மூலம் 220 சேனல்கள் வழங்கப்படுகின்றன. ரூ.1912-க்கு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செட்டாப் பாக்ஸ் கிடைக்கிறது. இதுவரை சுமார் 4 ஆயிரம் செட்டாப் பாக்ஸ்கள் விற்கப்பட்டுள்ளன. உரிமம் தொடர்பான எந்த தகவலும் எங்களுக்கு தெரியாது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in