

கல்வி, சுற்றுச்சூழல், மாற்றுத் திறனாளிகள் நலன் போன்றவற்றில் 10 ஆண்டுகளாக கவனம் செலுத்திவருகிறது ‘யுனைட்டட் வே சென்னை’ (UWC) அமைப்பு. மாற்றுத்திறன் மாணவர்களின் கல்லூரிப் படிப்புக்கு நிதியுதவி வழங்குவது, பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களுக்காக சிறப்பு நடைமேடை, கழிவறை அமைப்பது, வாழ்வாதாரம் இல்லாதமாற்றுத் திறனாளிகளுக்கு பெட்டிக்கடை அமைத்துத் தருவது, அரசு உதவியுடன் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவது, அங்கன்வாடிகளில் படிக்கும் குழந்தைகளை பள்ளி செல்ல தயார்படுத்துவது, பேரிடர் கால உதவிகள் என்று நீள்கிறது இவர்களது சேவை. தமிழகத்தில் இதுவரை 8 ஏரிகளையும் சீரமைத்துள்ளனர்.
தற்போது கரோனா ஊரடங்கால் வருமானமின்றி வாடும் சாலையோரவியாபாரிகளின் துயர் நீக்கும்பணியை கையில் எடுத்திருக்கின்றனர். சென்னை, கடலூர், மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் சாலையோர வியாபாரிகளுக்கு நிதியுதவி செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி உதவியுடன் சாலையோர வியாபாரிகள் குறித்த தகவலைப் பெற்று, தாங்களே அதை சரிபார்த்து, தேவைப்படுவோருக்கு மட்டும் நிதியுதவி அளித்துள்ளனர்.
‘‘இதுவரை ரூ.15 லட்சம் வரை திரட்டி, 260 குடும்பங்களுக்கு நிதி அளித்துள்ளோம்’’ என்கிறார் ‘யுனைட்டட் வே சென்னை’ அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர் சபினா நாராயணன். ‘‘தினசரி கூலியை நம்பியுள்ள சாலையோர வியாபாரிகளை ஊரடங்கு முடக்கிப் போட்டிருக்கிறது. இதனால்தான் அவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துகிறோம். ஊரடங்கு முடிந்த பிறகும் சாலையோர வியாபாரிகள் மீதான நம் அணுகுமுறை மாற வேண்டும். பெரிய கடைகள், மால்களில் மறுபேச்சின்றி பணம் கொடுக்கும்பலரும், வீட்டைத் தேடி வந்தோ, தெருவிலோ வியாபாரம் செய்பவர்களிடம் ஐந்துக்கும் பத்துக்கும் பேரம் பேசுவார்கள். இப்படி உழைத்துத் தேய்ந்துபோகிற எளியவர்கள்தான் சமூகத்தின் அச்சாணிகள். நாம்தான் அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். கூடுமானவரை இவர்களிடமே பொருட்களை வாங்க வேண்டும்’’ என்று கூறும் சபினா நாராயணன், மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
நகராட்சியிலோ, வேறு அமைப்புகளிலோ தங்களைப் பதிவுசெய்துகொள்ளாத, அப்படி ஒன்று இருப்பதே தெரியாத எளியவர்களுக்கு தங்கள் நிதியுதவி சென்று சேர வேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக உள்ளனர். அப்படிப்பட்டவர்களை தேடிக் கண்டுபிடித்து உதவுகின்றனர்.
‘‘சாலையோர வியாபாரிகளில் எல்லோருமே அத்தொழிலை தொடர்ச்சியாக செய்பவர்கள் அல்ல. சென்னையில் பூ விற்கும் பட்டு அம்மா, இதற்கு முன்பு வீட்டுவேலை செய்தவர். கரோனா பரவலால் அவரை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறிவிட்டனர். கணவர் பெயின்ட்டர். அவருக்கும் வேலை இல்லை. வருமானம் நின்றுபோக, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு வாழ வழி தெரியாமல் பூ கட்டி விற்கிறார்.
இன்னொருவர் காய்கறி விற்றுவந்த 52 வயது சுசீலா அம்மா. வியாபாரத்துக்கு போய் 2 மாதங்களான நிலையில், வட்டிக்கு கடன் வாங்கியும், ரேஷன் அரிசியை சாப்பிட்டும் வாழ்க்கை நடத்துகிறார். இப்படியான குடும்பங்களுக்கு முன்னுரிமை தருகிறோம். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் சில நெசவாளர்களுக்கும் நிதி அளித்துள்ளோம்’’ என்கிறார் ‘யுனைட்டட் வே சென்னை’ அமைப்பின் ஸ்ருதி கணேஷ்.
விழிப்புணர்வுக்காக, இதுபோன்ற எளிய மனிதர்களின் கதைகளை தங்கள் சமூக வலைதளப் பக்கங்களிலும் (https://goo.gl/N1ffh5) பகிர்ந்துள்ளனர்.
‘‘நம் மனங்களில் ஏற்படும் சிறு மாற்றம்கூட எளியவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும். எளியோரின் வாழ்வை சூழ்ந்திருக்கும் வறுமை இருளை அகற்றநாங்கள் ஒரு சிறு அகலை ஏற்றிவைக்கிறோம். அது பல நூறு விளக்குகளை நிச்சயம் ஒளிரச் செய்யும்’’ என்கிறார் சபினா நாராயணன்.