

இ-பாஸ் இல்லாமல் வேலூர் மாவட்டத்துக்கு வரும் வாகனங்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த3 வாரங்களாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 1,500-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சர்வ சாதாரணமாக இம்மாவட்டத்துக்குள் நுழைந்ததால் வைரஸ் தொற்று அதிக அளவில் பரவியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கரோனா பரவலை தடுக்க வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் கடும்கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். வேலூர் அடுத்த அரப்பாக்கம்-பிள்ளையார் குப்பம், கிறிஸ்டியான்பேட்டை பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. போலீஸார் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்கின்றனர்.
இ-பாஸ் இல்லாமல் வெளி மாவட்டத்தவர் வந்தால் அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடையாள அட்டையுடன் வரும் அரசு அலுவலர்கள், தனியார் நிறுவன ஊழியர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டைமாவட்டங்களிலும் சோதனைசாவடிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை அந்தந்த மாவட்டஆட்சியர்கள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.