Published : 26 Jun 2020 07:52 AM
Last Updated : 26 Jun 2020 07:52 AM
திருநெல்வேலி டவுன் நெல்லையப்பர் கோயில் அருகே உள்ள இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங், கரோனா தொற்று உறுதியான நிலையில் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி டவுனில் நெல்லையப்பர் கோயில் அருகே புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடை, 1940 முதல் செயல்பட்டு வருகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த பிஜிலிசிங் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த கடையை, தற்போது 3-ம் தலைமுறை வாரிசுகள் நிர்வகிக்கின்றனர்.
கடையின் உரிமையாளராக ஹரிசிங் (80) இருந்தார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த 23-ம் தேதி பெருமாள்புரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரி சோதனை யில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இந்நிலையில், மருத்துவமனை அறைக்குள் தனது வேட்டியால் தூக்கிட்டு ஹரிசிங் தற்கொலை செய்துகொண்டார். கரோனா பாதிப்பு குறித்து ஏற்பட்ட அச்சத்தால் இம்முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெருமாள்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக் கின்றனர். ஹரிசிங்கின் மருமகன் கோபால்சிங்குக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஹரிசிங் வீடு அமைந்துள்ள திருநெல்வேலி டவுன் அம்மன் சந்நிதி தெரு, கடை அமைந்துள்ள பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மனித உழைப்பில் தயாராகும் அல்வா
இங்கு தயாரிக்கப்படும் அல்வா ருசியாக இருக்க காரணம், அதற்கு தேவையான கோதுமையை இவர்கள் கையால்தான் அரைக்கிறார்கள். மேலும் மனித உழைப்பில்தான் அல்வா தயாராகிறது. தாமிரபரணி தண்ணீரும் சுவையைக் கூட்டுகிறது.ஒரு நாளைக்கு குறிப்பிட்ட அளவுக்குத்தான் இவர்களால் தயார் செய்ய முடிகிறது. இருட்டுக் கடை நாள்தோறும் மாலை 5.30 மணியளவில் திறக்கப்படுகிறது. அடுத்த 3 மணி நேரத்துக்குள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அல்வா காலியாகிவிடுகிறது.
விற்பனை தொடரும்
பிஜிலி என்ற ஹிந்தி சொல்லுக்கு மின்சாரம் என்று பொருள். 1940-ல் இருட்டுக் கடையைத் தொடங்கிய பிஜிலிசிங்கின் பெயரிலேயே மின்சாரம் இருப்பதாக கூறுவது உண்டு. அவரது குடும்பத்தினர் பாரம்பரியமாகவே அல்வா கடைக்குள் 200 வாட்ஸ் குண்டு பல்பை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். வேறு மின்விளக்குகள் அமைக்கவில்லை. மங்கிய வெளிச்சத்தில் செயல்பட்ட இந்த கடை இருட்டாகவே இருந்ததால் இருட்டுக் கடை என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இக்கடையின் குடும்பத்தினர் கூறும்போது, இருட்டுக்கடை அல்வாவை உலகளவில் கொண்டு சென்றவர் ஹரிசிங். அவரது வழியில் தரத்தில் சமரசம் செய்யாமல், தொடர்ந்து அல்வா விற்பனையை மேற்கொள்வோம் என்றனர்.
கரோனா அச்சம் தேவையில்லை
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவர் ஜி.ராமானுஜம் கூறியதாவது:
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. கரோனா குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உலக அளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை நெருங்குகிறது. அதேநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் குணமடைந்துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த நோய் பாதித்தால் அப்படியாகுமோ இப்படியாகுமோ என்றெல்லாம் நினைத்து குழப்பிக்கொள்ளக் கூடாது. பயப்படவும் தேவையில்லை. எதிர்மறை எண்ணங்களை கைவிட வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!