Published : 26 Jun 2020 07:16 AM
Last Updated : 26 Jun 2020 07:16 AM

கரோனா பேரிடரை சமாளிக்க கடந்த 3 மாதங்களில் தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி வழங்கப்பட்டுள்ளது: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

கரோனா பேரிடரை எதிர்கொள்ள தமிழகத்துக்கு ரூ.6,600 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக சார்பில் நேற்று ஏற்பாடு செய்திருந்த காணொலி பேரணியில் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலானபாஜக அரசு, 2014 முதல் 2019 வரைசிறப்பாக நடந்தது. அதனால்தான் தொடர்ந்து 2-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பாஜகவால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. 2-வது முறையாக ஆட்சி அமைத்துஓராண்டு நிறைவடைந்துள்ளது.

2014-ல் மோடி பிரதமரானதும் நகரங்களில் கிடைக்கும் இணைய வசதி அனைத்து கிராமங்களுக்கும் கிடைக்க முயற்சி மேற்கொண்டார். அதன்மூலம் இன்று அனைத்து கிராமங்களிலும் இணையவசதி உள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப் பிரிவு நீக்கம், அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை, குடியுரிமைச் சட்டம் என்று தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

நாடு முழுவதும் 14 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ. 6 ஆயிரம் மத்திய அரசு வழங்குகிறது. தமிழகத்தில் மட்டும் 35 லட்சத்து 59 ஆயிரம் விவசாயிகள் இத்தொகையை பெற்று வருகின்றனர்.

கரோனா ஊரடங்கால் தொழில்நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இயலாத நிலையில், நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி தவணையை மத்திய அரசே செலுத்தும் என்று அறிவித்தோம். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான கடன்வழங்கப்பட்டு வருகிறது. மீன்பிடிசார்ந்த தொழில் வளர்ச்சிக்கான திட்டங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கரோனா பேரிடரை சமாளிக்க கடந்த 3 மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.6,600 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 கோடியே 22 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.500 வீதம் 3 மாதங்களில் ரூ.610 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா பேரிடரை எதிர்கொள்ள ‘சுயசார்பு பாரதம்’ என்றதிட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இறக்குமதியே செய்யக் கூடாது என்பது சுயசார்பு பாரதம் திட்டத்தின் நோக்கம் அல்ல. நம்மால் தயாரிக்க முடியாத பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்யவேண்டும்.

உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்துதமிழகத்தில் பாதுகாப்புத் துறை தளவாடங்கள் தயாரிக்கும் தொழில்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x