

தூத்துக்குடியில் முகாமில் தங்கியிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த மூன்று போலீஸாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனையில் பிரசவமான பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியானதால், அந்த மருத்துவமனை மூடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தினமும் சராசரியாக 40 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மாவட்டத்தில் நேற்று வரை 732 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இன்று மேலும் 40 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 772 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி அருகேயுள்ள சிலுவைப்பட்டியில் பேரிடர் மீட்பு நிவாரண மையம் உள்ளது. இங்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 85 போலீஸார் தங்கியுள்ளனர். அவர்களில் 3 போலீஸாருக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து இதர போலீஸார் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் தூத்துக்குடி தாமோதர நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பிரசவமான ஒரு பெண்ணுக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், அவருக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனை மூடப்பட்டு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.