கோவையில் 3 மாதங்களில் 10 காட்டு யானைகள் உயிரிழப்பு: வன உயிரின ஆர்வலர்கள் வேதனை

சிறுமுகை வனச்சரகத்தில் உயிரிழந்த பெண் யானை
சிறுமுகை வனச்சரகத்தில் உயிரிழந்த பெண் யானை
Updated on
1 min read

கோவையில் கடந்த 3 மாதங்களில் மட்டும் வெவ்வேறு காரணங்களால் 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரக வனப் பணியாளர்கள் குழுவினர், மூலையூர் சரகத்திலிருந்து பவானி சாகர் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஒட்டியுள்ள வனப் பகுதிகளில் நேற்று (ஜூன் 24) ரோந்துப் பணி மேற்கொண்டனர். அப்போது மயில்மொக்கை சரகப் பகுதியில் துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் தேடுதலில் ஈடுபட்டனர்.

மாலை நேரமானதாலும், காட்டு யானைகள் நடமாட்டம் அதிக அளவில் இருந்ததாலும் தேடுதலைத் தொடர இயலவில்லை. இதையடுத்து இன்று (ஜூன் 25) காலை அதே பகுதியில் தேடுதல் பணியை மேற்கொண்டபோது பெண் யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்பு, உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் டி.வெங்கடேஷ் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் உடற்கூராய்வு மேற்கொண்டனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, "யானை இறந்து 8 முதல் 10 நாட்கள் ஆனதால் உடல் பாகங்கள் முற்றிலும் அழுகி சிதைந்து காணப்பட்டது. இருந்தாலும் சிதைவுற்ற மாதிரிகள் தடய ஆய்வு செய்வதற்காக சேகரம் செய்யப்பட்டுள்ளது. யானையின் வயது சுமார் 47 முதல் 49 வரை இருக்கும். உடல் பாகங்களை பிற ஊண் உண்ணிகளுக்கு இரையாக அப்படியே வனத்தினுள் விடப்பட்டது" என்றனர்.

கோவை மாவட்ட வனப்பகுதியில் ஊரடங்கு காலத்தில் மட்டும் 10 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதில், சிறுமுகை வனச்சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 6 யானைகள் உயிரிழந்துள்ளன. இவ்வாறு அடுத்தடுத்து யானைகள் உயிரிழந்துள்ளது வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in