Published : 25 Jun 2020 06:05 PM
Last Updated : 25 Jun 2020 06:05 PM

இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் தற்கொலை நமக்கு உணர்த்தும் பாடம்!

படங்கள்:ஆர்.ராஜேஷ்குமார்

'நோயுடன் போராடுங்கள்... நோயாளியுடன் அல்ல' என்ற வாசகம் அத்தனை அலைபேசி அழைப்பிலும் நம் காதுகளில் எதிரொலித்தாலும் கரோனா நோயாளிகளைப் பொது சமூகம் நடத்தும் விதம், பாதிக்கப்பட்டோரை எதிர் மனநிலைக்குத் தள்ளிவிடுகிறது. அப்படித்தான் தனக்குக் கரோனா தொற்று உறுதியானதால் தற்கொலை செய்திருக்கிறார் நெல்லையின் பிரசித்தி பெற்ற இருட்டுக்கடை உரிமையாளர் ஹரிசிங்.

நெல்லையின் தவிர்க்க முடியாத அடையாளம் ‘இருட்டுக்கடை’. இந்தக் கடையில் ஒரே ஒரு குண்டுபல்பு வெளிச்சத்தில் விற்கப்படும் அல்வாவை வாங்க ஜனத்திரள் காத்துக்கிடக்கும். வெளியூரில் இருந்து நெல்லை மார்க்கமாகச் செல்பவர்கள்கூட திருநெல்வேலியில் இருக்கும் தன் நண்பர்களுக்கு போன் செய்து இருட்டுக்கடை அல்வாவை பேருந்து நிலையத்திலோ, ரயிலிலோ கொண்டு வந்து கொடுக்கமுடியுமா எனக் கோருவதைக் கேட்கமுடியும்.

நெல்லை எக்ஸ்பிரஸிலும், நெல்லையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளிலும் கமகமக்கும் அல்வாவின் வாசம் இருட்டுக் கடையின் பேர் சொல்லும். அப்படிப்பட்ட கடையின் உரிமையாளர் ஹரிசிங், தனக்குக் கரோனா தொற்று எனத் தெரிந்ததும் தற்கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் சிரித்த முகத்துடனும், எவ்வளவு கூட்டத்திலும் வாடிக்கையாளர்களை நன் மதிப்போடும் நடத்தும் ஹரிசிங் தற்கொலை செய்திருப்பதை நினைத்து வேதனை தெரிவிக்கின்றனர் அவரது நெருங்கிய உறவுகள். கரோனா வந்தாலே யாரும் மரணித்து விடுவதில்லை. உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனாவால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை மிகக் குறைவே. வயதானவர்கள், தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அபாய கட்டத்தில் இருந்தாலும் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதும், போதிய ஊட்டச்சத்தான உணவுகளைச் சாப்பிடுவதும் கரோனாவிலிருந்து நம்மை எளிதில் மீள வைக்கும். ஆனாலும் கரோனா குறித்துப் பொது சமூகத்துக்குள் தேங்கியிருக்கும் அச்சமும், மற்றவர்களிடம் இருந்து தனித்து இருப்பதைப் புரிந்துகொள்ளாத தன்மையும் சிலரைத் தவறான முடிவை நோக்கி நகர்த்தி விடுகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் சுப்பிரமணி, “கரோனா என்ற பெயரைக் கேட்டாலே மக்கள் மனதில் ஒருவித அச்ச உணர்வு வந்துவிடுகிறது. கரோனா குறித்து பயப்படத் தேவையில்லை. இங்கே நமக்கு விழிப்புணர்வுதான் தேவை. அரசு, வெளியூரில் இருந்து வந்தவர்களையும் கரோனா சோதனை செய்தோரையும் முடிவுகள் வரும்வரை முகாம்களில் தனிமைப்படுத்துகிறது. நோய் உறுதியானால் 14 நாள்கள் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சேர்க்கிறார்கள். வசதியானவர்கள் தனியார் மருத்துவமனைக்குச் செல்கிறார்கள்.

ஹரிசிங்

இரண்டு இடங்களிலுமே நல்ல ஆரோக்கியமான உணவுகள் வழங்கப்படுகின்றன. இருந்தாலும் நோயாளியின் குடும்பத்தையே தனிமைப்படுத்தும்போது அவர்களுக்கு பயம் இன்னும் அதிகமாகிறது. தெருவாசிகளுக்கு இவர்கள் மீதான பார்வை வினோதமாக இருக்கிறது. கரோனா நோயாளிக்கும், அவர் சார்ந்தோருக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டியதன் அவசியத்தைத்தான் இருட்டுக்கடை உரிமையாளரின் மரணம் நமக்கு உணர்த்துகிறது” என்றார்.

1940-ல் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிஜிலிசிங் என்பவரால் தொடங்கப்பட்ட இருட்டுக்கடை, இப்போது அவரது மூன்றாம் தலைமுறை வாரிசான ஹரிசிங்கால் நடத்தப்பட்டு வந்தது. ’பிஜிலி’ என்ற இந்தி சொல்லுக்கு மின்சாரம் என்று அர்த்தம். இருட்டுக் கடையைத் தொடங்கிய பிஜிலிசிங்கின் பெயரிலேயே மின்சாரம் இருந்தும், விற்பனையில் உச்சத்தைத் தொட்டபோதும் அவரது குடும்பத்தினர் அல்வா கடைக்குள் ஒற்றை பல்பைத் தாண்டி விளக்கு வசதிகள் ஏதும் செய்துகொண்டதில்லை.

மாலை நேரத்தில் கடை இருட்டாகவும், ஒற்றை விளக்கு வெளிச்சத்தில் இயங்கியதாலும் அப்பகுதி மக்களால் இருட்டுக்கடை என அழைக்கப்பட்டது. ஹரிசிங்கின் மருமகனுக்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் தனிமையில் இருந்த ஹரிசிங்கிற்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கிறார் ஹரிசிங்.

ராஜஸ்தானில் இருந்து மூன்று தலைமுறைக்கு முன்பே நெல்லை வந்த இவர்களின் குடும்பத்தினர் அல்வா செய்யப் பயன்படுத்தும் கோதுமையை இயந்திரத்தில் அரைக்காமல் கைகளாலேயே அரைத்தார்கள். இந்த நவீன தொழில்நுட்பக் காலத்திலும் அது தொடர்கிறது. நெல்லையின் ஜீவாதாரமான தாமிரபரணி தண்ணீரும் இருட்டுக் கடையின் சுவைக்கு மற்றொரு காரணம் என்பார்கள். மனித உழைப்பை மூலதனமாகக் கொண்டு கைகளாலேயே கோதுமை மாவை அரைப்பதால் குறிப்பிட்ட அளவுக்குமேல் அரைக்க முடியாது. இதனால் தினமும் குறிப்பிட்ட அளவே அல்வா தயார் செய்வார்கள். பிரபலத் தன்மை கிடைத்ததும் வசூலை மட்டுமே கவனத்தில் கொள்பவர்களுக்கு மத்தியில் இருட்டுக்கடை தனித்துத் தெரிய காரணமே இதுதான்.

தனி பெயர்ப்பலகை கூட இல்லாமல், சின்னஞ்சிறிய 200 வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் மாலையில் மட்டுமே திறக்கப்படும் இருட்டுக் கடையில் இனி ஹரிசிங் இருக்கப் போவதில்லை. அவரது வாரிசுகளால் விரைவில் கடை திறக்கப்பட உள்ள நிலையில், இருட்டுக்கடை என்னும் 80 ஆண்டு அடையாளத்தை அசைத்துப் பார்த்திருக்கிறது கரோனா!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x