

ராமநாதபுரம் மாவட்டத்தில் உச்சிப்புளி கடற்படை விமானத்தள வீரர்கள் 29 பேர் உள்ளிட்ட 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அருகே உச்சிப்புளியில் ஐஎன்எஸ் பருந்து கடற்படை விமானத்தளம் உள்ளது. இங்கு பணிபுரியும் கடற்படை வீரர்கள் 41 பேருக்கு புதன்கிழமை கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 29 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடற்படை விமானத்தளம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலக காவலர் உள்ளிட்ட 4 காவலர்களுக்கு நேற்று முன்தினம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று கண்காணிப்பாளரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் ஒருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து நடமாடும் கரோனா பரிசோதனை வாகனம் மூலம் காவல் கண்காணிப்பாளரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அனைவருக்கும் கரோனா பரிசோதனைக்கு மாதிரி எடுக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டள நிலையில், இன்று மாவட்டத்தில் 38 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் 434 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் நெருக்கடி:
கரோனோவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் நெருக்கடியும் அதிகரித்து வருகிறது.
தற்போது ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக 200 படுக்கைகள் உள்ள நிலையில், தற்போது 300 படுக்கையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் பரமக்குடி அரசு மருத்துவமனையில் 65 படுக்கை தற்போது 100-ஆகவும், மற்ற அரசு மருத்துவமனைகள், 2 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 100 படுக்கைகள் மற்றும் கரோனா சிறப்பு மையங்கள் ஆகியவற்றில் என மாவட்டத்தில் மொத்தம் 2400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.