Published : 11 Sep 2015 06:59 PM
Last Updated : 11 Sep 2015 06:59 PM

திடக்கழிவு மேலாண்மைத் திட்டம்: வழிகாட்டுகிறது குருடம்பாளையம் ஊராட்சி

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் குருடம்பாளையம் ஊராட்சி முன்னோடி கிராமமாக உருவெடுத்து வருகிறது. குப்பைகளைச் சேகரித்து தயாரிக்கப்படும் உயிரி எரிபொருளைப் பயன்படுத்தி, சமூக சமையலறையில் தங்களது வீட்டுக்கு தேவையான உணவை சமைத்து எடுத்துச் செல்கின்றனர் கிராம மக்கள்.

கோவை அருகே உள்ள குருடம்பாளையம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் மூலமாக வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தல், மீன் தொட்டியுடன் கூடிய இயற்கை முறையிலான எருவாக்கும் மேடை, இயற்கை எரிவாயு தயாரித்தல், மண்புழு உரம் தயாரித்தல், குப்பை தரம் பிரித்தல், சமுதாய சமையற்கூடம், உணவு கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் சமுதாய சமையற்கூடத்தில் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒன்றுகூடி தினமும் தங்களது வீட்டுக்கு தேவையான உணவினை சமைத்து எடுத்துச் செல்கின்றனர்.

வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்பட்ட குப்பை மூலமாக, உயிரி எரிபொருளைத் தயாரித்து அந்த எரிபொருளை பயன்படுத்தி சமுதாய சமையற்கூடத்தில் சமையல் பணி நடக்கிறது.

ஒற்றுமையாகக் கூடி சமைத்து உணவு உண்ணும் வாய்ப்பை கிராம மக்களுக்கு இந்த திட்டம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் தா.முருகன் கூறியதாவது: கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குருடம்பாளையம் ஊராட்சியில் கொண்டு வரப்பட்டது. இங்குள்ள 15 வார்டுகளில் இருந்து 8 வார்டுகளைத் தேர்வு செய்து பாபா அணு ஆராய்ச்சி நிலையத்தின் உதவியுடன் கழிவுகளில் இருந்து எரிபொருள் மற்றும் மதிப்புக்கூட்டுப் பொருள் தயாரிக்கும் பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதற்கான கட்டமைப்புப் பணி கடந்த மாதம் நிறைவு பெற்றுள்ளது. தற்போது, வீடு வீடாக சேகரிக்கப்பட்ட குப்பைகளை மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகிறோம்.

இதில் ஒன்றுதான் உயிரி எரிபொருள் தயாரிப்பு. குப்பைகளில் இருந்து 2 மெட்ரிக் டன் அளவுக்கு உயிரி எரிபொருள் எடுத்து சமுதாயக்கூடத்தில் 20 அடுப்புகளுக்கு எரிவாயு இணைப்பு கொடுத்துள்ளோம்.

தற்போது, சமுதாயக்கூடத்துக்கு வந்து 20 அடுப்புகளில் கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் சமையல் செய்து எடுத்துச் செல்கின்றனர்.

மூன்று வேளையும் சமையல் பணி நடக்கிறது. இதனால் 263 குடும்பங்கள் பயன் அடைந்துள்ளனர். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தால் 300 குடும்பங்களுக்கு தினமும் வருமானம் கிடைத்து வருகிறது. தற்போது கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை 11 கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குருடம்பாளையம் ஊராட்சி 11-வது கிராமம் ஆகும்.

இந்த திட்டத்தால் வெறும் 2 சதவீதம் குப்பை மட்டுமே நிலத்துக்கு செல்கிறது. ஏனையவை மதிப்புக்கூட்டு பொருளாக்கப்பட்டு வருகிறது. வரும் 3 ஆண்டுகளுக்குள் இந்த திட்டத்துக்காக செலவு செய்த ரூ.87 லட்சத்தை எடுத்து விட முடியும். கிராமமும் குப்பை இல்லாமல் தூய்மையாக இருக்கும்.

இந்த திட்டத்தை கோவை மாவட்டத்தில் மேலும் 106 ஊராட்சிகளுக்கு விரிவுபடுத்த உள்ளோம். இதற்கான பணி வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு பெறும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x