

மதுரை மாநகராட்சியில் 18 வார்டுகளில் ‘கரோனா’ தொற்று தற்போது இல்லை. அதில், மீனாட்சியம்மன் கோயில் பகுதி அமைந்துள்ள 84வது வார்டில் தற்போது ‘கரோனா’ பாதிப்பே இல்லை.
மதுரை மாநகராட்சி 100 வார்டுகளில் 82 வார்டுகளில் ‘கரோனா’ தொற்று பரவியுள்ளது. மாநகராட்சிப்பகுதியில் நேற்று வரை 700-க்கும் மேற்பட்டோருக்கு ‘கரோனா’ தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், 60 சதவீதத்திற்கும் மேலானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாநகராட்சியில் 18 வார்டுகளில் தற்போது ‘கரோனா’ நோயாளிகள் இல்லை. இதில், முத்துராமலிங்கபுரம் (100-வது வார்டு), ஐராவதநல்லூர் (55-வது வார்டு) ஆகிய வார்டுகளில் இதுவரை ஒருவர் கூட ‘கரோனா’ பாதிப்பு வராமல் உள்ளது.
‘கரோனா’ இல்லாத 18 வார்டுகளில் மீனாட்சியம்மன் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள கடை வீதிகள், குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ள 84வது வார்டும் அடங்கும். இந்த வார்டில் தற்போது ஒரு நோயாளி கூட இல்லை. ஆனால், ‘கரோனா’ ஆரம்பித்தபோது இந்த வார்டில் ஒரு சிலருக்கு ‘கரோனா’ வந்து அவர்கள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர்.
மீனாட்சியம்மன் கோயில் நடைபாதைகளில் தினமும் ஆயிரக்கணக்கானோர் காலையில் நடைபயிற்சி செல்வார்கள். ஊரடங்கு அறிவித்த நாள் முதல், அந்த நடைபாதைகளில் கூட பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை.
இடையில் ஊரடங்கு தளர்வு அறிவித்தபோது சில நாட்கள் மட்டும் மக்கள் நடைபயிற்சி சென்றனர். தற்போது அதுவும் நிறுத்தப்பட்டுள்ளது. மீனாட்சியம்மன் கோயிலுக்கு சுற்றுலாப்பயணிகள், வெளியூர் பக்தர்தான் அதிகம் வருவார்கள். அவர்களை குறி வைத்துதான் கோயில் சுற்றுவட்டாரப்பகுதியில் கடை வீதிகள் செயல்படும். கோயில் நடை திறக்காததால் சுற்றுலாப்பயணிகள், பக்தர்கள் வராமல் கடைவீதிகளும் முன்போல் செயல்படவில்லை.
ஊரடங்கு தளர்வு அறிவித்தபோது கடை வீதிகள் செயல்பட்டாலும் அதுவும் சமூக இடைவெளியுடனே மக்கள் வந்து சென்றதால் கோயில் அமைந்துள்ள வார்டு பகுதியில் தற்போது ‘கரோனா’ தொற்று இல்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.