

தேமுதிகவினர் யாரும் தற் கொலை முயற்சி செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அக்கட்சி யின் தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பழநியில் நடந்த தேமுதிகவின் ‘மக்களுக்காக மக்கள் பணி’ பொதுக்கூட்டம் முடிவுறும் நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த கஜேந்திர பிரபு என்ற தொண்டர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோனேன். மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தபோது எனது மனம் மிகுந்த வேதனை அடைந்தது. அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்.
தேமுதிக தொண்டர்கள் நம் பிக்கையோடும், தைரியத்தோடும் இருக்க வேண்டும். கோழைத்தன மாக தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதை அனுமதிக்க மாட் டேன். வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சினைகள் வரும், போகும். அதற்கு தற்கொலை தீர்வாகாது.
தொண்டர் கஜேந்திர பிரபு, என் மீது அளவுகடந்த பிரியத்தோடும், பற்றோடும் இருந்தவர் என்பது எனக்கு நன்கு தெரியும்.
தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் நாம். துரோகம் செய்யும், ஏமாற்றும் ஆட்சி யாளர்களிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதுதான் நமது தலையாய கடமை. எனவே, யாரும் எந்தக் காலத்திலும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக் கூடாது.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.