Last Updated : 25 Jun, 2020 03:14 PM

 

Published : 25 Jun 2020 03:14 PM
Last Updated : 25 Jun 2020 03:14 PM

சாத்தான்குளம் சம்பவத்தில் காவல்துறையின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது: பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம் தவறானது. காவல்துறையின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினரால் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்படக்கூடாது என பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்காசியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் கடந்த 5 ஆண்டு ஆட்சியிலும், கடந்த ஓராண்டிலும் பாஜக அரசு மகத்தான சாதனைகளை செய்துள்ளது. கரோனா தொற்றால் உலக நாடுகளில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. உலக நாடுகள் போற்றும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு பெருமை சேர்க்கும் நல்ல திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துள்ளார்.

எல்லா மாநிலங்களிலும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் திட்டம், 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், 9 கோடி பேருக்கு மேல் இலவக காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை பாஜக அரசு செயல்படுத்தி வருகிறது. கரோனா காலத்தில் மட்டும் 9 ஆயிரம் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. பல ரயில்கள் கரோனா சிகிச்சைக்காக படுக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்ட விதம் தவறானது. காவல்துறையின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. காவல்துறையினரால் இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேல் ஏற்படக்கூடாது.

கரோனா ஒழிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்று எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் கரோனா தொற்று அதிகமாக இருப்பது கவலை அளிக்கிறது.

அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல. பொதுமக்களும் அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x