

மாவட்ட கூட்டுறவு வங்கிகளையும், மாநில கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது என்ற மத்திய அரசின் நடவடிக்கை சரியானது அல்ல என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று (ஜூன் 24) தெரிவித்தார். இந்த முடிவு கூட்டாட்சித் தத்துவத்திற்கும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் எதிரானது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அதேபோன்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் மத்திய அரசின் முடிவை விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (ஜூன் 25) தன் ட்விட்டர் பக்கத்தில், "ஒன்றிரண்டு மாநிலங்களில் தவறு நடந்தது என்பதற்காக நாடு முழுவதும் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளையும், மாநில கூட்டுறவு வங்கிகளையும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது என்ற மத்திய அரசின் நடவடிக்கை சரியானது அல்ல.
கிராமப் பொருளாதாரத்தையும், விவசாயிகளையும், உழைக்கும் மக்களையும் அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதுடன், அவர்களுக்கு ஆதாரமாகவும் இருக்கும் கூட்டுறவு வங்கிகளின் அதிகாரத்தைப் பறிப்பது கூட்டுறவு அமைப்பின் நோக்கத்தையே சிதைத்துவிடும்.
எனவே, இந்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.