

வயது வித்தியாசம், வசதி வாய்ப்புகள் என எதையும் பாராமல் பலரையும் ஆட்கொள்கிறது மன அழுத்தம். நாளாக நாளாக எண்ணங்களின் குவியல் அழுத்தமாக மாறி, சில நேரங்களில் தற்கொலை வரை கொண்டுபோய் நிறுத்துகிறது. அதற்கான சமீபத்திய உதாரணம், பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்.
தற்கொலை என்பது தனிமனிதச் செயல் என்றாலும், அவர்களைச் சார்ந்த குடும்பமும், சமூகமும் இதனால் பாதிக்கப்படுகிறது. இந்தியாவில் ஒரு லட்சம் மக்கள்தொகையை எடுத்துக்கொண்டால், அதில் ஆண்டுக்கு சராசரியாக 10 பேர் வரை தற்கொலை செய்துகொள்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
காரணங்கள் என்ன?
கோவையைச் சேர்ந்த மூத்த மன நல மருத்துவர் என்.எஸ்.மோனியிடம் இதுகுறித்துப் பேசினோம்.
"இழப்பு, தோல்வி, வெறுப்பு, அவமானம், ஏமாற்றம், குற்ற உணர்வு, தன்மீது நம்பிக்கையின்மை போன்றவை தற்கொலை எண்ணத்துக்குக் காரணமாகின்றன. பக்குவப்படாத மனநிலையில் உள்ளவர்கள், உணர்ச்சிவயப்பட்டு முடிவு எடுப்பவர்கள், ஏமாற்றம் வந்தால் தாங்கிக்கொண்டு எதிர்நீச்சல் போடத் தெரியாதவர்கள் தற்கொலைக்குத் தூண்டப்படுகின்றனர். மன வருத்தம், மனச்சிதைவு, போதைப்பழக்கம் மற்றும் பொருளாதாரக் காரணங்களும் எண்ண மாற்றத்துக்கு வித்திடுகின்றன.
பல தற்கொலைகள் கணவன்-மனைவி, காதலன்-காதலி, பெற்றோர்-குழந்தை, மாமியர்-மருமகள், நண்பர்களுக்குள் பிரச்சினை என இருவர் சம்பந்தப்பட்டதாக இருக்கின்றன. இதுதவிர, முதியவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருப்பவர்கள் பெரும்பாலும் தனிமையில் வாடுபவர்களாகவும், அரவணைப்பு இல்லாதவர்களாகவும் இருக்கின்றனர்.
திடீர் செயல் அல்ல
தற்கொலை என்பது முன்னெச்சரிக்கை இல்லாமல் திடீரென நடைபெறும் நிகழ்வு என்று கருதுகின்றனர். அது தவறு. தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்களை உடையோர், அதை ஏதாவது ஒரு தருணத்தில் யாரிடமாவது வெளிப்படுத்துவார்கள். 'வாழ்க்கையே தேவையற்றது. செத்துப்போவதே நிம்மதி', 'நான் மற்றவர்களுக்குச் சுமையாக இருக்க வேண்டாம்' இதுபோன்ற வார்த்தைகள் மூலம் அவர்களிடம் அதிருப்தி வெளிப்படலாம். அந்த வார்த்தைகளை உதாசீனப்படுத்தமால் ஆறுதல் கூறி மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். அவ்வாறு அடையாளம் காணாமல் அலட்சியப்படுத்துவதாலேயே பல தற்கொலைகள் நிகழ்கின்றன. தற்கொலை செய்துகொள்ளும் அனைவரையும் மனநோயாளிகள் என்று கூற முடியாது. சில நேரங்களில் சந்தர்ப்ப சூழல், குழப்பம் போன்றவையும் தற்கொலைக்குத் தூண்டுகிறது.
மனம்விட்டுப் பேசுங்கள்
விரக்தியில் இருப்போர் தங்கள் மனதில் உள்ளவற்றை நம்பிக்கையான நபரிடம் பகிர்ந்துகொண்டாலே மனம் அமைதியாகிவிடும். மனக்குழப்பங்கள் வெளியேறினால்தான் வேதனை குறையும். சொல்லி அழுதுவிட்டால் துன்பம் தீரும் என்பார்கள். ஆனால், நாம் சொல்லி அழ ஏதுவான நபர்களுக்குதான் இங்கு பற்றாக்குறை. வேதனையைக் காதுகொடுத்துக் கேட்க பலர் தயாராக இல்லை.
அறிகுறிகளைக் கவனியுங்கள்
யாரிடமும் பேசாமல் தனிமையில் இருப்பது, எதற்கெடுத்தாலும் அழுவது, உணவு உண்பது குறைந்துபோவது, சரியான தூக்கம் இல்லாமல் இருப்பது இவையெல்லாம் பிரச்சினை இருப்பதற்கான அறிகுறிகள். இந்தச் சூழவில் நண்பர்கள், உறவினர்கள், மருத்துவர் என யாரேனும் ஒருவர் அவர்களின் மனக்குமுறலைக் காதுகொடுத்து முதலில் முழுமையாகக் கேட்க வேண்டும்" என்றார் மருத்துவர் என்.எஸ்.மோனி.
மருந்துகள் தீர்வாகுமா?
கடுமையான மன உளைச்சல், தூக்கமின்மை, விரக்தி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை மருந்துகளால் குணப்படுத்த முடியுமா என அவரிடம் கேட்டதற்கு, "மூளையில் சுரக்கும் 'செரட்டோனின்' எனும் ரசாயனம் மன மகிழ்ச்சிக்கு வித்திடுகிறது. தற்கொலை செய்துகொள்பவர்களுக்கு இதன் சுரப்பு குறைவாக இருந்தது ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.
எனவே, மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு செரட்டோனின் அளவை அதிகரிக்க சில மருந்துகளை அளிக்கும்போது அந்த எண்ணங்கள் சற்று மட்டுப்படும். ஆனால், மருந்துகள் மட்டுமே தீர்வாகாது. தற்கொலைக்கு ஒருவர் முயல்கிறார் என்றாலே, அவர் உதவிக்காக அழுகிறார் என்று அர்த்தம். எனவே, தற்கொலை என்பது எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு அல்ல என்பதை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும். அன்பும், அரவணைப்பும், தகுந்த ஆலோசனையுமே தீர்வை அளிக்கும்" என்றார்.