

சிறந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையாக விளங்கி தற்போது மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு தற்போது புதுச்சேரி அரசால் தனியாரிடம் ஒப்படைக்கத் தயாராகிறது லிங்காரெட்டிப்பாளையம் சர்க்கரை ஆலை. தற்போது உள்ள ரூ.123 கோடி கடன் சுமையோடு 20 ஆண்டு காலத்திற்கு குத்தகை ஒப்பந்தம் அடிப்படையில் நடத்துவதற்கு தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்கள் இ-டெண்டரில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இதற்கு மவுனத்தில் உள்ளன.
புதுச்சேரி லிங்கா ரெட்டிப்பாளையத்தில் 1984-ல் மாநில அரசால் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆரம்பிக்கப்பட்டது. ஆலையில் தொடக்கத்தில் 1,100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆலையில் தங்கள் கரும்பை அரவைக்காக வழங்கினர். சிறந்த லாபத்தில் இயங்கி வந்த இந்த ஆலை நாட்டின் 2-வது சிறந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையாக விளங்கியது.
கடந்த 2000-ம் ஆண்டு காலகட்டம் வரை லாபத்தில் இயங்கியது. பல்வேறு காரணங்களால் அதன்பின்னர் ஆலை நலிவடையத் தொடங்கியது. இதனால் விவசாயிகளுக்கு அவர்கள் அனுப்பிய கரும்புகளுக்கு சரிவர பணப் பட்டுவாடா செய்யப்படவில்லை. அதேபோல் தொழிலாளர்களுக்கும் சம்பளம் சரியாக தரப்படவில்லை. சிறந்த ஆலை எனப் பெயர் பெற்ற இந்த ஆலை தற்போது மோசமான நிலையை அடைந்துள்ளது. மில் தற்போது ரூ.123 கோடிக்கு மேல் நஷ்டத்தில் உள்ளது.
முதல்வர் நாராயணசாமியும் மத்திய அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு கரும்பு ஆலையை மீட்க நிதியுதவி அளிக்குமாறு கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலையை தனியாரிடம் ஒப்படைக்க ஆலோசித்திருந்தனர். அதற்கு எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.
கரோனா சூழலில் புதுச்சேரி அரசின் லிங்கா ரெட்டிபாளையம் கூட்டுறவு கூட்டுறவு சர்க்கரை ஆலையை தற்போது உள்ள கடன் சுமையோடு 20 ஆண்டு காலத்திற்கு குத்தகை ஒப்பந்தம் அடிப்படையில் நடத்துவதற்குத் தகுதி வாய்ந்த தனியார் நிறுவனங்கள் இ-டெண்டரில் கலந்துகொள்ள அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கரும்பு விவசாயிகள் கூறுகையில், "ஆலையின் கடன் சுமையோடு தனியார் நிறுவனம் எடுத்து நடத்த முன்வரும்பட்சத்தில் விவசாயிகளிடமிருந்து கரும்பைக் கொள்முதல் செய்து அதன் மூலம் சர்க்கரை உற்பத்தி செய்து விற்பனை செய்து விட்டு விவசாயிகளுக்குப் பணப் பட்டுவாடா செய்யாவிட்டால் யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் குறைந்த முதலீட்டில் இயந்திரங்களைப் பழுதுபார்த்து விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்து சர்க்கரை விற்பனை தொடங்குவார்கள். அத்துடன் மொலாசஸ் விற்பனை மூலம் தனியாருக்கு லாபம் கிடைக்கும். அதே நேரத்தில் விவசாயிகளுக்குத் தர வேண்டிய கரும்புக்கான தொகையை அரசு எவ்விதம் பொறுப்பேற்கும் என்ற சந்தேகம் உள்ளது.
நஷ்டத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையைத் தனியாருக்கு தாரைவார்க்கும் அரசின் முயற்சியை புதுச்சேரியில் உள்ள எந்தக் கட்சியும் அல்லது அமைப்புகளும் அல்லது இயக்கங்களும் எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் என்பது புரியவில்லை. பாஜக மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த புதுச்சேரி காங்கிரஸ் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலையை தனியாருக்கு வழங்குவது எந்தவிதத்தில் நியாயம்" என்று கேள்வி எழுப்புகின்றனர்.