Last Updated : 25 Jun, 2020 01:16 PM

 

Published : 25 Jun 2020 01:16 PM
Last Updated : 25 Jun 2020 01:16 PM

புதுச்சேரியில் அதிமுக எம்எல்ஏக்கள் மூவர் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா

தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள்.

புதுச்சேரி

புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் தராததால் அதிமுக எம்எல்ஏக்கள் மூவர் துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி அதிமுக சட்டப்பேரவை கட்சித்தலைவர் அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் எம்எல்ஏக்கள் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் ஆகியோர் இன்று (ஜூன் 25) சட்டப்பேரவையில் இருந்து பதாகைகளுடன் புறப்பட்டனர். புதுச்சேரி அரசு மற்றும் துணைநிலை ஆளுநரைக் கண்டித்து எழுதப்பட்ட பதாகைகள், கருப்புக் கொடியுடன் நடந்து ஆளுநர் மாளிகை முன்பு சென்று சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் எம்எல்ஏ கூறுகையில், "புதுச்சேரி மாநிலம் முழுவதும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 23 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் மீன்பிடித் தடைக்கால உதவி பெற்று வந்தன. இந்நிலையில், அதில் அரசு ஊழியர்கள் உள்ளிட்ட தகுதியற்றவர்களை நீக்கம் செய்து, கடந்த ஆண்டு 19 ஆயிரம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5,500 மீன்பிடி தடைக்கால நிவாரண உதவியை அரசு வழங்கியது.

இந்த ஆண்டு மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் இன்று வரை மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவியை அரசு வழங்கவில்லை. மீனவர்களில் முதியோர் உதவித்தொகை பெறுபவர்களுக்கு மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவி வழங்க முடியாது என புதிய விதிமுறையை அரசு அறிவித்துள்ளது. அந்தவகையில், கடந்த ஆண்டு மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவி பெற்ற சுமார் 19 ஆயிரம் நபர்களில் தற்போது சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியம் பெறும் மீனவர்களுக்கு தடைக்கால நிவாரண உதவி மறுக்கப்படுவது நியாயமற்ற செயலாகும்.

இந்தியா முழுவதும் மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவியை அந்தந்த மாநில அரசுகள் வழங்கிவிட்ட நிலையில், மீன்பிடித் தடைக்கால நிவாரண உதவி புதுச்சேரி அரசின் முரண்பட்ட நிர்வாகத்தால் இன்று வரை வழங்கப்படவில்லை. இது மீனவர்களை வஞ்சிக்கும் செயலாகும்.

கடந்த ஆண்டு மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்கிய அனைவருக்கும் இந்த ஆண்டும் மீன்பிடித் தடைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

நிவாரணத் தொகையை உடன் தராவிட்டால் நாளை (ஜூன் 26) புதுச்சேரியில் உள்ள 18 மீனவக் கிராம மக்களும் பங்கேற்று நடத்தும் கருப்புக் கொடி போராட்டத்திற்கும் அதிமுக ஆதரவு அளித்துப் பங்கேற்கும்" என்று தெரிவித்தார்.

தர்ணாவில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்களிடம், எஸ்.பி. மாறன் சென்று, 'கரோனா காலமாக இருப்பதால் 144 தடை உத்தரவு உள்ளது. சாலையில் அமர வேண்டாம்' என்று தெரிவித்தார். ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x