Published : 25 Jun 2020 01:12 PM
Last Updated : 25 Jun 2020 01:12 PM

ஆறு மாத வட்டி தள்ளிவைப்பு போதாது; தள்ளுபடி செய்யவேண்டும்: மன்றாடும் திருப்பூர் பனியன் நிறுவனங்கள்

திருப்பூரில் உள்ள சில பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் முகக்கவசம் மற்றும் கரோனா பாதுகாப்பு உடைகள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதால் பாதிப்பிலிருந்து ஓரளவு மீண்டு வந்திருந்தாலும் இன்னும் பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர் பற்றாக்குறை, கடன் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் மீண்டுவர முடியாமல் தவிக்கின்றன.

“முகக்கவசம், கரோனா பாதுகாப்பு உடைகள் தயாரிப்பு என்பது யானைப் பசிக்கு சோளப்பொரிதான். 10 சதவீத நிறுவனங்கள்தான் அதில் ஈடுபடுகின்றன. அதுவும் பெரிய ஏற்றுமதியாளர்களுக்கே அதில் அதிக ஆர்டர்கள் கிடைக்கின்றன. மற்றவர்கள் நிலை பரிதாபத்திற்குரியது” என்கிறார்கள் பனியன் நிறுவன உரிமையாளர்கள்.

பனியன் ஏற்றுமதி செய்யும் பெரிய நிறுவனங்கள் மட்டுமின்றி உள்நாட்டு பனியன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்களும், ஜாப் ஆர்டர் நிறுவனங்களும் நிறைந்துள்ள நகரம் திருப்பூர். தென் மாவட்ட, வட மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமின்றி, வட இந்தியத் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பை அள்ளித்தந்த இந்நகரம் இன்றைக்குத் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் கொத்துக்கொத்தாய் தங்கள் சொந்த ஊர் திரும்பிவிட்டனர். சுமார் 2 லட்சம் பேர் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. தென்மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சுமார் 1 லட்சம் பேர் அவரவர் ஊர்களுக்குச் சென்றுவிட்டதால், சில ஆயிரம் தொழிலாளர்கள் மட்டுமே தற்போது திருப்பூரில் எஞ்சியிருக்கின்றனர். சில நிறுவனங்கள் அவர்களைத் தங்கவைத்து உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இருக்கும் தொழிலாளர்களை வைத்துதான் அந்நிறுவனங்கள் சமாளித்துக் கொண்டிருக்கின்றன.

மேலும், பழைய ஆர்டர்கள்தான் இப்போதைக்குக் கைகொடுக்கின்றன. ஏற்கெனவே வெளிநாடுகளுக்குத் தயாரித்து அனுப்பிய பனியன்கள் கப்பலிலேயே தங்கிவிட்டதும், வரவேண்டிய தொகை வராமல் இருப்பதும் சிக்கலை அதிகமாக்கியிருக்கின்றன. தனிமனித இடைவெளி பின்பற்றப்படுவதால் மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள், அதுவும் ஒரு ஷிஃப்ட் மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள். அது பெருநஷ்டம் என்பதால் 80 சதவீத நிறுவனங்கள் இயங்குவதில்லை.

“டையிங், பிராசஸிங் சுத்தமாக நடக்கவில்லை. இதனால் இதைச் செய்யும் 500-க்கும் மேற்பட்ட யூனிட்டுகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கினறன. முகக்கவசங்களைப் பனியன் துணியில் செய்யக்கூடாது. காடா துணியில்தான் தயாரிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எனவே அதிலும் பனியன் துணிக்கு அடி விழுந்திருக்கிறது” என்கிறார் திருப்பூர் இண்டஸ்ட்ரியல் ஃபெடரேஷன் தலைவர் அகில் மணி.

மேலும் அவர் கூறுகையில், “முந்தி 3 ஷிஃப்ட் ஓட்டீட்டு இருந்தேன். அதுல 80- 100 பேர் வேலை செய்வாங்க. இப்ப ஒரே ஷிஃப்ட் அதுவும் 20-25 பேர்தான். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. ஆர்டர் வருமான்னு தெரியலை. இந்த மாதிரி ஓட்டறதுல பெரிய நஷ்டம்தான். கரன்ட், லேபர், கட்டிட வாடகை, பேங்க் கடன் இதையெல்லாம் கணக்குப் பார்த்தா கையிலயிருந்துதான் லட்சக் கணக்குல பணம் போயிட்டிருக்கு. டையிங் தொழில்ல 400 கம்பெனிக்கு மேல இருக்கு. நிட்டிங் ஜாப் ஒர்க் தனியா 500 கம்பெனிகள் மேல இருக்கு. எங்க மாதிரி ப்ராசசிங் ஜாப் ஒர்க் 300 பேருக்கு மேல செய்யறோம். இவங்க யாருக்கும் முகக்கவசம், கரோனா உடை தயாரிப்புப் பணி இல்லை.

இப்ப பொதுமுடக்கத்தை இன்னமும் கடுமையாக்கிட்டாங்க. மாவட்டம் விட்டு மாவட்டமே போக முடியாது. இதனால கோவை தொழிலாளர்கள்கூட இங்கே வர முடியாத நிலை மறுபடியும் வந்துடுச்சு. தென் மாவட்டத் தொழிலாளர்களும் வர முடியாது. அவங்க எல்லாம் அங்கே பெரும்பாலும் 100 நாள் வேலைத் திட்டத்துல சேர்ந்துட்டதாத் தகவல் வருது. ஒரு ஸ்பேர் பார்ட்ஸ் வாங்கணும்னா கோவைக்குத்தான் போகணும். இப்ப அதுவும் முடியாது.

இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீண்டுவரவே பல வருஷம் ஆகும்னு தோணுது. இந்த நிலையில 6 மாசம் கழிச்சு வங்கிக் கடனைக் கட்ட முடியுமான்னு தெரியலை. 6 மாசம் தள்ளி வச்சது போதாது. வட்டியையே தள்ளுபடி செய்யணும். நாங்க இத்தனை வருஷமா பாடுபட்டு சம்பாதிச்சு பேங்க்லதானே கடன் வாங்கி கடனும் வட்டியும் கட்டியிருக்கோம்.

அதுல எல்லா வங்கியும் இப்ப நல்லாத்தானே இருக்கு. எங்களால வாழ்ந்தவங்க கொஞ்ச காலத்துக்கு வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாதா? இந்த தொழில்ல மறைமுகமா சம்பாதிச்ச அவங்களுக்கு எங்க தொழிலைக் காப்பாற்றதுலயும் பங்கிருக்குதானே? இப்போதைய சூழ்நிலைக்கு ஜிஎஸ்டி கூடக் கட்ட முடியாம இருக்கோம். அதையும் அரசாங்கம் ரத்து செய்யணும். இல்லை, குறைஞ்சபட்ச சலுகையாவது கொடுக்கணும். இல்லைன்னா இந்தத் தொழிலை யாராலும் காப்பாத்தவே முடியாது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x