Published : 25 Jun 2020 10:23 AM
Last Updated : 25 Jun 2020 10:23 AM

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள 673 தமிழக மீனவர்களை அழைத்துவர இன்று புறப்படும் சிறப்பு கப்பல்

ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்கள் கப்பல் மூலம் தமிழகம் வரவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூன் 25) வெளியிட்ட செய்தி வெளியீடு:

"தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 700 மீனவர்கள் ஒப்பந்த அடிப்படையில் ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தனர். ஈரான் நாட்டில் கரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் மீன்பிடி தொழில் மேற்கொண்டு வந்த தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.

கரோனா வைரஸ் நோய் சர்வதேச பரவல் காரணமாக, வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களை தாயகம் கொண்டு வருவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழக முதல்வர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் தமிழகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, இந்திய அதிகாரிகள் ஈரானில் தங்கியுள்ள மீனவர்களை நேரில் சென்று சந்தித்து அம்மீனவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அத்தியாவசிய தேவையான உணவு மற்றும் பிற வசதிகள் அனைத்தும் கிடைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, ஈரான் நாட்டில் இருக்கும் தமிழக மீனவர்களை தமிழகம் அழைத்துவர பிரத்யேக கப்பல் இன்று (ஜூன் 25) புறப்படவுள்ளது. இக்கப்பல் மூலம் தமிழகத்தினை சேர்ந்த 673 மீனவர்கள் விரைவில் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைவார்கள்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x