

ஈரோட்டில் தினசரி 1,000 முதல் 1,100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
காய்கறி வியாபாரிகள், கால் டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை முகாம் ஈரோட்டில் நேற்று நடந்தது. முகாமைப் பார்வையிட்ட ஆட்சியர் சி.கதிரவன் கூறியதாவது:
கடந்த சில நாட்களில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், 19 பேர் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வந்தவர்களாவர். ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் 1000 முதல் 1,100 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அனைவரும் பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஒரு நாள் தங்க வைக்கப்படுகின்றனர்.
அதன்பின்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சைக்கும், தொற்று உறுதி செய்யப்படாத வர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
ஈரோடு மாவட்டத்துக்கு முழுஊரடங்கு உத்தரவு தேவையில்லை. இருப்பினும், மேற்குமண்டலத்தில் 8 மாவட்டங்கள் உள்ளதால், மாவட்டங்களுக்குள் போக்கு வரத்தைக் கட்டுப்படுத்திடும் வகையில், இ-பாஸ் பெற்றுத்தான் மாவட்டங்களுக்குள் செல்ல வேண்டுமென்ற நடைமுறையை கொண்டு வர தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலரின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.