

வெண்புள்ளி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 25-ம் தேதி உலக வெண்புள்ளி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன் இந்நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஜாக்சன் மறைந்த தினமான ஜூன் 25-ம் தேதி உலக வெண்புள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வெண்புள்ளி நோயால் நாடுமுழுவதும் 6 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 37 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உளவியல்ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய்க்காக லூகோஸ்கின் என்ற மூலிகை மருந்தைடிஆர்டிஓ கண்டுபிடித்துள்ளது. இம்மருந்தை 300 முதல் 400 நாட்கள் வரை தொடர்ந்து உட்கொண்டால் வெண்புள்ளிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கிறது.
இதுகுறித்து வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்க செயலாளர் உமாபதி கூறியதாவது:
சத்து குறைபாடு காரணமாக இந்நோய் ஏற்படுகிறது. இது தொற்று நோய் அல்ல, கரோனா போல உயிர்க்கொல்லி நோயும் அல்ல. ‘வெண்புள்ளி உள்ளவர்களை வெண்குஷ்டம் கொண்டவர்கள் என்று சொல்லக்கூடாது’ என அரசு ஆணையிட்டுள்ளது.
ஆனால், சமூகத்தின் அறியாமைப் பார்வை அவர்களை ஒருகடுமையான நோயாளி மனோபாவத்துக்குத் தள்ளிவிடுகிறது. இதனால், இதுகுறித்த அறிவியல் உண்மைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். அதன்மூலம் லட்சக்கணக்கானோர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். மேலும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயன்பெற வழி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.