2 நாள் மழையால் சகதியான திருமழிசை சந்தை: முன் வரிசையில் மட்டும் விற்பனையாவதால் மற்றவர்கள் அவதி

திருமழிசை காய்கறி சந்தையில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை பார்வையிடுகிறார் ஆட்சியர் மகேஸ்வரி. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ் .
திருமழிசை காய்கறி சந்தையில் சாலைகளை சீரமைக்கும் பணிகளை பார்வையிடுகிறார் ஆட்சியர் மகேஸ்வரி. உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ் .
Updated on
1 min read

திருமழிசை பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் அங்குள்ள காய்கறி சந்தை சேறும், சகதியுமாக மாறியுள்ளது.

கரோனா தொற்று காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்ட நிலையில், திருமழிசையில் கடந்த மே 10-ம்தேதி முதல் தற்காலிகமாக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது.

இப்பகுதியில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் சந்தையில் பி, சி வளாகங்களுக்கு பின்புறம் உள்ள பகுதியில் அமைக்கப்பட்ட கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் அங்குள்ள சாலைகளிலும் மழைநீர்தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள கடைகளில் வியாபாரம் நடைபெறவில்லை.

இது தொடர்பாக காய்கறி வியாபாரிகள் கூறும்போது, “எங்கள் கடைகளில் மழைநீர்தேங்கியுள்ளதால் காய்கறிகளை லாரியில் இருந்து இறக்கமுடியவில்லை. அந்த சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டதாலும், சாலைகள் சேறும், சகதியுமாக மாறியதாலும், கடைகளுக்கு சரக்குகளை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சரக்குகளை ஏற்றி வரும் வாகனங்களில் பெரும்பாலானவை பெரிய கனரக வாகனங்களாகவே உள்ளன. கடும் சிரமங்களுக்கிடையில் காய்கறிகளை விற்பனை செய்தாலும், இப்பகுதிக்கு வியாபாரிகள் யாரும் வர விரும்பவில்லை. இதனால் வியாபாரம் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

முன் வரிசையில் உள்ள கடைகளில் வியாபாரிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அங்கு சமூக இடைவெளியை யாரும் கடைபிடிக்கவில்லை. எனவே மழை வந்தாலும், இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் சந்தை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

இந்நிலையில், இங்கு சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி இப்பணிகளை நேற்று பார்வையிட்டார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, சந்தை தலைமை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in