

தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ள தமிழக அரசு, கரோனா சிகிச்சையையும் அதில் சேர்த்துள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களுக்காக கடந்த 2016-ம் ஆண்டு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தில் தகுதியானவர்கள் ஆண்டுக்கு ரூ.4லட்சம் வரை மருத்துவ சேவை பெறலாம். சிறப்பு சிகிச்சைகளுக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் வரை மருத்துவ சேவைகளை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த திட்டம் 2016-ம் ஆண்டு ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரையுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் வரும் ஜூன் 30-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கரோனாவைரஸ் பரவலைக் கருத்தில்கொண்டு, காப்பீட்டு நிறுவனத்தின் ஒப்புதலையும் பெற்று மேலும் ஓராண்டுக்கு அதாவது 2021 ஜூன் 30-ம் தேதி வரை காப்பீட்டு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரம், வருவாய், ஊரகவளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், காவல்துறை என பல்வேறு துறைகளின் பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்கள பணியாளர்கள், தலைமைச் செயலக பணியாளர்கள் என பலரும்தற்போது தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், அவர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் கரோனா சிகிச்சையை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குழு பரிந்துரை
இதுதொடர்பாக மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநர்பி.உமாநாத், கருவூலத் துறை ஆணையர் சி.சமயமூர்த்தி, நிதித்துறை இணை செயலர் அரவிந்த், பொது சுகாதார இயக்குநர் டி.எஸ்.செல்வவிநாயகம் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து ஆய்வு செய்யப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரைகள்படி, காப்பீட்டுத் திட்டத்தில் கரோனா சிகிச்சையும் சேர்க்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைபெறும் நிலையில், வென்டிலேட்டர்பயன்படுத்தாத நிலையில் நாள்ஒன்றுக்கு ரூ.6,500-ம், வென்டிலேட்டர் பயன்படுத்தினால் ரூ.8,500-ம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை தேவைப்படாத நிலையில், ஏ-1மற்றும் ஏ-2 பிரிவு மருத்துவமனையில் தனி அறை சிகிச்சைக்கு நாள்ஒன்றுக்கு மருந்து செலவையும்சேர்த்து ரூ.9,500, ஏ-3 முதல் ஏ-6பிரிவு மருத்துவமனைகளில் ரூ.7,500 கட்டணமாக வசூலிக்கலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீவிர சிகிச்சை பிரிவுக்கான பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை காப்பீட்டு நிறுவனம், மருத்துவமனைக்கு வழங்கும். இதற்காக அரசு ஊழியர்களுக்கு ரூ.5 கோடியையும், ஓய்வூதியர்களுக்கு ரூ.2.5 கோடியையும் தொகுப்பு நிதியாக அரசு ஒதுக்கியுள்ளது.