

ஊரடங்கைப் பயன்படுத்தி போலி இ-பாஸ் வழங்கிய 2 அரசு அதிகாரிகள், டிராவல்ஸ் கார் ஓட்டுநர்கள் 3 பேர் என மொத்தம் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளியூர் செல்பவர்கள் உரிய காரணங்களுடன் விண்ணப்பித்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது. முன்னர் போலீஸ் வசம் இ-பாஸ் வழங்கும் முறை இருந்தபோது அதில் பல தவறுகள் நடந்ததால் அது மாநகராட்சி வசம் மாற்றப்பட்டு செயலி மூலம் கண்காணிக்கப்படுகிறது.
இந்நிலையில் பணம் கொடுப்பவர்கள் எளிதில் இ-பாஸ் பெற்றுவிடுவதாகப் புகார் எழுந்தது. துரைராஜ் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் இதுகுறித்துக் கொடுத்த புகாரில், சில நபர்கள் முறைகேடான வழியில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பொதுமக்களுக்கு இ-பாஸை உரிய ஆவணம் இன்றி பெற்றுத் தருவதாகவும், நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்திருந்தார். இந்தப் புகார் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் டிராவல்ஸ் ஓட்டுநர்கள் சிலர் இ-பாஸ் வழங்கும் ஊழியர்களுடன் சேர்ந்து பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு முறைகேடான வழியில் இ-பாஸ் பெறுவது தெரியவந்தது.
அதனடிப்படையில் டிராவல்ஸ் வாகன ஓட்டுநர்களான காஞ்சிபுரம் திருவாஞ்சேரியைச் சேர்ந்த மனோஜ்குமார் (31), அம்பத்தூர், மேனாம்பேடைச் சேர்ந்த வினோத்குமார் (32) , அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த ஜி.எம்.தேவேந்திரன் (33), எம்.கே.பி நகரைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் உதயகுமார் (34), புளியந்தோப்பைச் சேர்ந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணியாற்றும் குமரன் (35) ஆகியோரைக் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் மனோஜ்குமார், வினோத்குமார் மற்றும் தேவேந்திரன் ஆகிய வாடகை கார் ஓட்டுநர்கள் தொலைபேசி மற்றும் வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு வெளியூர் செல்வதற்காக அணுகும் வாடிக்கையாளர்களிடம் இ-பாஸ் பெற்றுத் தருவதாகக் கூறி பாஸ் ஒன்றுக்கு ரூ.2,000/- பெற்றுக் கொண்டு உதயகுமார் என்பவரை அணுகி அவர் மூலம் இ-பாஸ் வழங்கும் அலுவலகத்தில் பணிபுரியும் குமரன் என்பவரிடம் தொடர்பு கொண்டு மேற்படி நபர்களின் விண்ணப்பங்களைச் சரி பார்க்காமல் இ-பாஸ் வழங்கியுள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் செல்போன்கள், சிம் கார்டு, மெமரி கார்டு, இ-பாஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்குப் பின் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.