Published : 24 Jun 2020 09:06 PM
Last Updated : 24 Jun 2020 09:06 PM

சிறந்த எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் சன்சத் ரத்னா விருதுகள்: இந்த ஆண்டு யார் யாருக்கு?

சன்சத் ரத்னா விருது தேர்வுக் குழு: எம்.பி.ஸ்ரீ ரங் அப்பா பார்னே, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், எம்.பி பிரேம சந்திரன்

சென்னை

2020-ம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்களின் பட்டியலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று வெளியிட்டார்.

கடந்த 2010-ம் ஆண்டு சென்னையில் உள்ள ப்ரைம் பாயின்ட் பவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனமும், இந்த நிறுவனம் வெளியிடும் “ப்ரீசென்ஸ்” இணைய மாத இதழும் சன்சத் ரத்னா விருது திட்டத்தை ஏற்படுத்தின.

நாடாளுமன்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கும் எம்.பி.க்களுக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும் நோக்கம் என்ற திட்டத்தை உருவாக்கி சன்சத் ரத்னா விருது விழா நடத்திடத் தூண்டுகோலாக இருந்தது.

2010-ம் ஆண்டில் முதல் விருது விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் தொடங்கி வைத்தார். விருதுகள் பெறுபவர்கள் சிறந்த நாடாளுமன்ற வாதிகளால் வெளிப்படைத் தன்மையுடன் மக்களவைச் செயலகமும் பி.ஆர்.எஸ். இந்தியா எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனமும் அளிக்கும் தரவுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர்.

பிரைம் பாயின்ட் பவுண்டேஷன் மற்றும் சன்சத் ரத்னா விருதுகள் குழுவின் தலைவர் கே.சீனிவாசன் கருத்துப்படி, தேர்வு குழு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை சன்சத் மகா ரத்னா விருதுக்கு பரிந்துரைத்துள்ளது.

16- வது மக்களவையின் செயல்திறன் தரத்தின் அடிப்படையில் இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்படுள்ளது. இந்த விருது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. 17ம் மக்களவையின் உறுப்பினர்களின் செயல் திறன் அடிப்படையில், சன்சத் ரத்னா விருது 2020 பெற 8 மக்களவை உறுப்பினர்களும், 2 மாநிலங்களவை உறுப்பினர்களும், ஒரு நாடாளுமன்ற நிலைகுழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டுக்கான சன்சத் ரத்னா விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட எம்.பி.க்களின் பட்டியலை நாடாளுமன்ற
விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று வெளியிட்டார்.

அப்போது இதுபற்றி கூறிய அவர் ‘‘பொதுமக்களால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கீகரிக்கப்படுவதும் மற்றும் அவர்கள் செயல்திறனை மதிப்பாய்வு செய்வதும் ஜனநாயகத்தை வலுப்படுத்த உதவும்” என்று கூறினார்.

பொது மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தேர்ந்தெடுக்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் செயல்திறனை கண்காணிக்க அவர்களுக்கு தார்மீக உரிமையும் பொறுப்பும் உள்ளது என்று சன்சத் ரத்னா விருதுகளின் தேர்வு குழுவின் தலைவரான அமைச்சர் கூறினார்.

இந்த தேர்வு குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.கே. பிரேம சந்திரன் (கேரளா) மற்றும் ஸ்ரீ ரங் அப்பா பார்னே (மகாராஷ்ட்ரா) ஆகியோரும் உள்ளனர். மூவரும் ஏற்கெனவே நாடாளுமன்றப் பணிப் பங்களிப்பைப் போற்றத்தக்க வகையில் வழங்கி கடந்த மக்களவையில் சன்சத் ரத்னா விருதுகள் பெற்று உயர்ந்தவர்கள் என்பது நினைவு கூறத்தக்கது.

இந்த ஆண்டு விருதுகள் வழங்கும் விழாத் கரோனா தொற்று சூழல் முடிந்த பிறகு தீர்மானம் செய்து அறிவிக்கப்படும்.

சன்சத் மகா ரத்னா விருதுகள்

1) பார்த்ருஹரி மஹ்தாப் (பி.ஜே.டி, கட்டாக், ஒடிசா)

2) சுப்ரியா சூலே (என்.சி.பி, பாரமதி, மகாராஷ்டிரா)

3) ஷ்ரீ ரங் அப்பா பார்னே (சிவசேனா, மாவல், மஹராஷ்டிரா)

ஆகிய மூவருக்கும் 16- வது மக்களவையில் தொடர்ச்சியான தரமான செயல்திறனுக்காக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுரை வழங்கப்படும் ‘சன்சத் மகா ரத்னா’ விருது வழங்கப்படுகிறது. .

நிலைக்குழு

வேளாண்மை துறை தொடர்பான நிலைக்குழுவுக்கு சன்சத் ரத்னா விருது 2020 வழங்கப்படுகிறது. இந்த நிலைக்குழு நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையிலும் மற்றும் இந்த குழு நடத்திய அமர்வுகளின் அடிப்படையிலும் இந்த குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பி சி காடிகவுடர் (பாஜக, பாகல்கோட் கர்நாடகா) இந்த குழுவின் தலைவராக உள்ளார்.

மக்களவை
17 ஆம் ஆண்டு மக்களவையின் முதல் ஆண்டின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு எட்டு மக்களவை உறுப்பினர்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் சன்சத் ரத்னா விருதுகள் 2020 ஐப் பெறுவார்கள்.

சுப்ரியா சுலே (என்.சி.பி, பாரமதி, மகாராஷ்டிரா) 17 வது மக்களவையின் முதல் ஆண்டில் விவாதங்கள், கேள்விகள் மற்றும் தனியார் மசோதாக்களில் தனது ஒட்டுமொத்த செயல்திறனுக்காக சன்சத் ரத்னா 2020 விருதைப் பெறுகிறார்.

டாக்டர் ஹீனா கேவிட் (பி.ஜே.பி, நந்தூர்பார் , மகாராஷ்டிரா ) பெண் உறுப்பினர்களில் சிறந்த
பணியாற்றியதற்கான சன்சத் ரத்னா விருதினை பெறுகிறார்.

டாக்டர் அமோல் ராம்சிங் கோலி (தேசியவாத காங்கிரஸ், ஷிர்பூர், மகாராஷ்டிரா) மற்றும் டாக்டர் சுபாஷ் ராமராவ் பாம்லே (பாஜக, தூலே,மகாராஷ்டிர ) ஆகியோர் முதல்முறை உறுப்பினர்கள் மற்றும் அதிக கேள்விகள் பிரிவில் சன்சத் ரத்னா விருதுகள் பெறுகிறார்கள்.

இவர்களை தவிர சசி தரூர் (காங்கிரஸ், திருவனந்தபுரம், கேரளா), நிஷிகாந்த் துபே (பாஜக, கோடா, ஜார்கண்ட்), அஜய் மிஸ்ரா (பாஜக, கேரி, உத்தரப்பிரதேசம்) மற்றும் ராம் மோகன் நாயுடு (தெலுங்கு தேசம், ஸ்ரீகாகுளம், ஆந்திரா) ஆகியோர் ஒட்டுமொத்த தரமான செயல்திறன் மற்றும் தனிப்பட்ட முயற்சிகளுக்காக சன்சத் ரத்னா சிறப்பு விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவை
விஷம்பர் பிரசாத் நிஷாந்த் (உ.பி. சமாஜ்வாதி கட்சி), மற்றும் சாயா வர்மா (சத்தீஸ்கர், காங்கிரஸ்) ஆகியோர் மாநிலங்களவையில் கடந்த ஓராண்டில் ஆற்றிய பல்முனைத் திறன்களுகாக சன்சத் ரத்னா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலங்களவையில் பணியாற்றி வரும் உறுப்பினர்களுக்கு இவ்வாண்டில் இருந்து இப்புதிய விருதுத் திட்டம் விரிவாக்கி அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பெறுவோர் கருத்து

சன்சத் மகா ரத்னா விருதை ஏற்றுக்கொள்ள இருக்கும் சுப்ரியா சுலே இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில் ‘‘16வது மக்களவைக்கான மகா ரத்னா விருது பெறுவதில் மிகுந்த பெருமை கொள்கிறேன். இந்த விருதின் மூலமாக எனக்கான சமுதாயத்தொண்டு எந்த அளவுக்கு மிகுதியானது என்ற பொறுப்பை நான் உணர முடிகிறது. இனிவரும் காலத்தில் அந்த கடமைகளை நான் நிறைவுடன் நிகழ்த்திக் காட்டுவேன் என்று சபதம் ஏற்கிறேன்’’ என்றார்.

சிறந்த நிலை குழுவுக்கான விருதைப் பெற இருக்கின்ற பி.சி. காடிகவுடர் கூறுகையில் ‘‘அப்துல் கலாம் ஏற்படுத்திய சன்சத் ரத்னா விருதை ஏற்றுக்கொள்வதில் மிகப்பெரும் மகிழ்ச்சியை அடைகிறேன். மிகப்பெரும் கௌரவம் அளிக்கக்கூடிய இந்த விருதினை நாடாளுமன்ற நிலைக் குழு சார்பிலும், உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் சார்பாகவும் பெரு மகிழ்வோடு ஏற்றுக் கொள்வேன்.’’ என்றார்.

சன்சத் மகா ரத்னா விருதினைப் பெற இருக்கின்ற பாத்ரூ ஹரி மகதப் கருத்து தெரிவிக்கையில் ‘‘குறிப்பாக மக்களிடையே அரசியல்வதிகள் மேல் ஒரு அவநம்பிக்கை இருக்கின்ற நேரத்தில் சிறந்த உறுப்பினர்களை கவுரவிப்பது பாராட்டுக்குறியது. இது திறமையுள்ள இளைஞர்களை அரசியலுக்கு இழுக்கும். இதற்கு சன்சத் ரத்னா விருதுகள் வழிகாட்டுகின்றன.’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x