

மதுரையில் நேற்று 97 பேருக்கு ‘கரோனா’ உறுதி செய்யப்பட்டதால்பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மதுரையில் நேற்று ஆயிரத்தை தாண்டியது.
தமிழகத்தில் நேற்று வரை 67,468 பேர் ‘கரோனா’வால் பாதிக்கப்பட்டனர். இதில், மதுரை மாவட்டத்தில் ஆரம்பத்தில் தொற்று பரவல் மிக குறைவாகவே இருந்தது. அப்படியே தொற்று கண்டுபிடிக்கப்பட்டாலும் அது ஒற்றை இலக்கத்திலும், சில நாட்கள் வராமல் கூடும் இருந்தது. கடந்த 3 வாரமாக இரட்டை இலக்கத்தில் தினமும் தொற்று பரவல் அதிகரித்தால் மிக விரைவாக சென்னையை போல் மதுரையில் ‘கரோனா’ பரவியது. நேற்று ஒரே நாளில் 97 பேருக்கு தொற்று கண்டறிப்பட்டதால்
மதுரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை(1,073) கடந்தது. இவர்களில் 423 பேர் இதுவரை சிகிச்சையில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தற்போது 641 நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் மாநகராட்சியில் மட்டுமே 700க்கும் மேற்பட்டோர் இதுவரை ‘கரோனா’ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சியில் 50 சதவீதம் வார்டுகளில் ‘கரோனா’ தொற்று பரவல் அதிகமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 82 வார்டுகளில் மட்டுமே ‘கரோனா’ நோயாளிகள் உள்ளனர். சாந்திநகர்(1வது வார்டு), கூடல் நகர்(2வது வார்டு, பொன்னநகரம்(11வது வார்டு), ஆரப்பாளையம்(10வது வார்டு), கிருஷ்ணாபாளையம்(12வது வார்டு), கருப்பக நகர்(27வது வார்டு), தெப்பகுளம்(54வது வார்டு), ஐராவதநல்லூர்(55வது வார்டு), கீரைத்துரை(64வது வார்டு), நவரத்தினாபுரம்(72வது வார்டு), லட்சுமி புரம்(73வது வார்டு), மீனாட்சியம்மன் கோயில்(84வது வார்டு), வீரகாளியம்மன் கோயில்(90வது வார்டு), தென்னகரம்(91வது வார்டு), டிவிஎஸ் நகர்(93வது வார்டு), திருநகர்(98வதுவார்டு), பாலாஜி நகர்(99வது வார்டு), முத்துராமலிங்கபுரம்(100வது வார்டு) ஆகிய 18 வார்டு பகுதிகளில் மட்டுமே தற்போது ‘கரோனா’ பாதிப்பு இல்லாமல் உள்ளது.
இதில், முத்துராமலிங்கபுரம்(100வது வார்டு), ஐராவதநல்லூர்(55வது வார்டு) ஆகிய வார்டுகளில் மட்டுமே இதுவரை ஒருவர் கூட ‘கரோனா’ பாதிப்பு வராமல் உள்ளது. மற்ற 92 வார்டுகளில் ‘கரோனா’ தொற்று நோயாளிகள் கண்டறிவதும் குணமாகி வீடு திரும்புவதுமாக உள்ளனர். மாநகராட்சியில் நேற்று நிலவரபடி அதிகப்பட்சமாக மீனாம்பாள் புரத்தில் 13 பேரும், சுந்தராஜபுரத்தில் 11 பேரும், கோச்சடையில் 11 பேரும், எல்லீஸ்நகர், புதுநகர், வில்லாபுரத்தில் தலா 9 பேருக்கும், ஆலங்குடி, உத்தங்குடி, நரிமேடு ஆகிய பகுதிகளில் தலா 9 பேரும் இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த வார்டுகளில் இன்று பாதிக்கப்பட்டோரையும் சேர்த்தால்நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கூடும். இப்பகுதியில் பாதிக்கப்பட்ட மற்ற நோயாளிகள் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.