

சென்னையில் இருந்து சிவகங்கை திரும்பிய இளைஞருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இறுதிச் சடங்கில் பங்கேற்றோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க காலத்தில் 12 பேர் மட்டுமே கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் குணமடைந்தனர்.
தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு, காஞ்சிரங்கால் பகுதியைச் சேர்ந்த 38 வயது இளைஞர் ஒருவர், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினார். அவருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது தந்தை நேற்றுமுன்தினம் இறந்தார். நேற்று நடந்த அவரது இறுதிச் சடங்கில் சென்னையில் இருந்து வந்த இளைஞரும் கலந்து கொண்டார். இந்நிலையில் அந்த நபருக்கு கரோனா இருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதேபோல் திருப்பத்தூரில் மதுரை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் மருத்துவ பணியாளர்களுக்கு பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுதவிர சிவகங்கை, லாடனேந்தல், பெரியகோட்டை, பாவனாக்கோட்டை மானாமதுரை, முக்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் இன்று கரோனாவால் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (47), உயிரிழந்தார்.