

சாத்தான்குளத்தில் நீதிமன்றக் காவலில் இருந்த தந்தை - மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 24) வெளியிட்ட அறிக்கை:
"தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு ஊரடங்கு பணியாக சாத்தான்குளம் கடைவீதியில் கடந்த 19-ம் தேதி கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஜெயராஜ் (58) என்பவர், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து அவரது கைப்பேசி கடையைத் திறந்து வைத்திருக்க, கடையின் முன்பு ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் (31) மற்றும் சிலர் கூட்டமாக நின்றிருந்துள்ளனர்.
ரோந்து காவலர்கள் அவர்களை கடையை மூடிவிட்டு, கலைந்து செல்லுமாறு கூறியபோது, மற்றவர்கள் உடனே கலைந்து சென்றுவிடட்டனர். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் கடையை மூட மறுத்துவிட்டதால், இச்சம்பவம் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
சாத்தான்குளம் காவல் துறையினர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை 19-ம் தேதி இரவு கைது செய்து, 20-ம் தேத அதிகாலை சாத்தான்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவில்பட்டி கிளை சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில், 22-ம் தேதி இரவு 7.35 மணிக்கு சிறையில் இருந்த பென்னிக்ஸ் தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகக் கூறியதையடுத்து, சிறைக் காவலர்கள் பென்னிக்ஸ்-ஐ கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பென்னிக்ஸ் சிகிச்சை பலனின்றி இரவு 9 மணியளவில் உயிரிழந்தார்.
இந்நிலையில், 23-ம் தேதி அதிகாலை சிறையில் இருந்த பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜ் தனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததையடுத்து, சிறைக் காவலர்கள் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். சிகிச்சையில் இருந்த ஜெயராஜ் அன்று காலை 5.40 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி நீதித்துறை நடுவர் எண்.1-ல் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.
இதனையடுத்து, நேற்று (ஜூன் 23), ஜெயராஜின் உறவினர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழப்புக்குக் காரணமான காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து, அக்குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிக்க வேண்டுமென்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமென்றும் கோரி, சாத்தான்குளம் கடைவீதியில் சாலை மறியலில் ஈடுபட்டு பின்னர் அதிகாரிகள் தலையீட்டின் பேரில் கலைந்து சென்றனர்.
இதற்கிடையே, ஜெயராஜின் மனைவி செல்வராணி தனது கணவர் மற்றும் மகன் ஆகியோர் உயிரிழந்தது தொடர்பாக, அவர்களது பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய உத்தரவிடக் கோரி மனு ஒன்றை நேற்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்தார். அம்மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, திருநெல்வேலி அரசு மருத்துவமனை முதல்வர், உயிரிழந்த நபர்களின் பிரேதப் பரிசோதனையை, மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு மூலம் நடத்தவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இச்சம்பவம் குறித்து தானாக முன்வந்து இன்று (ஜூன் 24) விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. விசாரணையின்போது, தென்மண்டல காவல்துறைத் தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் ஆஜராகி, இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேசன் மற்றும் தலைமைக் காவலர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதிகள், தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வழக்கு குறித்து நிலவர அறிக்கை தாக்கல் செய்யவும், பிரேத விசாரணை மற்றும் பிரேதப் பரிசோதனையை வீடியோ பதிவு செய்து அதன் அறிக்கைகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, இவ்வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் என்று தெரிவித்து, மனுவை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் எண்.1 நீதிபதி பிரேத புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இச்சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இச்சம்பவம் குறித்து விசாரித்து வரும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் பேரிலும் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக பிறப்பிக்க உள்ள உத்தரவின் அடிப்படையிலும், இச்சம்பவத்தில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாயினை முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மேலும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்"
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.