Published : 24 Jun 2020 05:28 PM
Last Updated : 24 Jun 2020 05:28 PM

தகுதியானவர்களுக்கு வங்கிக் கடன் வாங்கித் தருவதில் என்ன தவறு?- தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேட்டி

கோவை

கரோனா காலத்தில் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய தொழில்கள், புதிய கடன்கள் பெற்றுத் தரப்படும் என்று களமிறங்கியிருக்கிறது தமிழக பாஜக தரப்பு.

இதற்காகவே www.bankloanhelplinedsbjp.in என்ற இணையதளத்தையும் தொடங்கியிருக்கிறது. தமிழில், ‘வங்கிக்கடன் உதவும் தாமரை’. இதற்காக பாஜக மாவட்டத் தலைவர்களின் கீழ் அந்தந்த மாவட்டங்களில் வங்கி அனுபவம் உள்ள 300 பாஜகவினர், தன்னார்வலர்கள் போல் இயங்கிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து, ‘பாஜக அமைத்துள்ள குழுவின் மூலமாகத்தான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற முடியும் என்ற நிலை உருவாவதை எப்படி ஏற்பது? இதே முறையை மற்ற அரசியல் கட்சிகளும் கையாண்டால் என்ன ஆகும்?’ என்பன போன்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. மேலும், ‘தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை தமிழக பாஜகவின் பரிந்துரையின்படி செயல்பட வைப்பது அப்பட்டமான சட்டவிரோத செயலாகும்’ என்றும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் இதை கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து, இந்தத் திட்டத்தின் தலைவரும், தமிழக பாஜக பொருளாளருமான எஸ்.ஆர்.சேகருடன் பேசியதிலிருந்து...

பாஜகவினர் மூலம் வருபவர்களுக்குக் கடன் கொடுக்க கொடுக்க வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கிகளுக்கு மறைமுகமாக உத்தரவிட்டிருக்கிறார் என்றும், மிரட்டி விண்ணப்பங்கள் வாங்கப்படுகின்றன என்றும் கே.எஸ்.அழகிரி போன்றோர் குற்றம் சாட்டியிருக்கிறார்களே?

வங்கிக் கடன் முறையில் காங்கிரஸ் அரசு உருவாக்கியிருக்கும் நிலையை மாற்றத்தான் இதைத் தொடங்கியிருக்கிறோம். ‘வங்கிக் கடன்தானே? திருப்பிக் கட்ட வேண்டியதில்லை’ என்ற மக்களின் மனநிலையை அகற்றுவதற்கும், ‘இவர்களுக்குக் கடன் கொடுத்தால் திரும்பி வரவே வராது’ என்று வங்கிகளுக்குள் ஆழமாய் ஊறிப்போன எண்ணத்தை அகற்றுவதற்கும்தான் நாங்கள் இந்த அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறோம்.

அப்படிச் செய்ய முடியுமா என்ன? அதிலும் கரோனா காலத்தில் இதை ஆரம்பித்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளதாகப் பொதுமக்களிடமே பேச்சு உள்ளதே!

அப்படி எதுவுமே இல்லை. இது இந்திய அளவில்கூட கிடையாது. தமிழ்நாடு பாஜக மட்டும் இந்த முயற்சியை எடுத்திருக்கிறது. மத்திய அரசின் ‘முத்ரா லோன்’ திட்டத்தில் அதிகமான கடன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மாநிலம் தமிழகம். அது ஆரம்பிக்கப்பட்டு 5 வருடம் ஆகிவிட்டது. அந்தக் கடன் உதவிகளை யார் யாருக்குக் கொடுத்தார்கள். யார் வாங்கினார்கள். பலன் பெற்றவர்கள் யார் என்று யாருமே எந்தப் புள்ளிவிவரமும் சொல்வதில்லை.

‘இந்தக் கடன் மக்களுக்கு முறையாகப் போய்ச் சேர்கிறதா இல்லையா?

இல்லை என்றால் அதை நாமே வாங்கிக் கொடுப்போம் என ஒரு சமூகப் பொறுப்புடன் செயல்படத்தான் இதை ஆரம்பித்திருக்கிறோம். ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, தன் தொகுதியில் மட்டும் 1 லட்சம் பேருக்குக் கல்விக் கடன் பெற்றுத்தர ஏற்பாடு செய்தார். அதில் பாதிகூட வசூல் ஆகவில்லை. இவ்வளவு பேசும் காங்கிரஸ் தலைவர் அழகிரி, தனது ஏரியாவில் மட்டும் 2 வருடத்தில் லட்சம் பேருக்குக் கடன் வாங்கித் தந்திருக்கிறார். அதிலும் பாதிப் பேர் கடனை திருப்பிக் கட்டவில்லை. வங்கிக் கடன் என்றாலே திருப்பிக் கொடுக்க வேண்டியதில்லை என்ற எண்ணம்தான் இதற்குக் காரணம்.

இது மாதிரியான எண்ணப்போக்கு கொண்டவர்களால்தான் வங்கிகள் திறமையானவர்கள், தகுதியானவர்களுக்குக் கூட கடன் கொடுக்க யோசிக்கின்றன. அந்த வங்கிகளின் யோசனையில் உள்ள இறுக்கத்தைப் போக்கிவிட்டால் முறையானவர்களுக்கு வங்கிக் கடன் போய்ச் சேரும். வங்கிகள் இறுக்கத்தைத் தளர்த்திவிட்டு தகுதியான எல்லோருக்கும் கடன் கொடுக்க வேண்டும் என்று நமது நிதியமைச்சர் சொல்கிறார். அதற்கு வலு சேர்க்கும் வகையில்தான் இந்த மாதிரியான திட்டங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். மற்றபடி இதில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை. கரோனா பொதுமுடக்கத்தின் பின்னால் பணப் புழக்கத்தை அதிகப்படுத்தி, தொழில்களைக் காப்பாற்றி மேம்படுத்துவதுதான் எங்களுடைய நோக்கம். முந்தைய ஆட்சிகளில், எல்லாவற்றிலும் கணக்குக் காட்டும் வேலைதான் நடந்திருக்கிறது. நாங்கள் உண்மையாக இயங்குகிறோம்.

ஆனால், கரோனா காலத்தில் பல தொழில் நிறுவனங்கள் முடங்கிக்கிடக்கும் சூழலில், இந்த முயற்சி எப்படிப் பலன் தரும்? கரோனா சூழல் முடிந்து செய்ய வேண்டிய விஷயம் அல்லவா இது?

புதிய தொழில் தொடங்க இதுதான் சரியான நேரம். இது விளையாடுவதற்கு ஆளில்லாத மைதானம். எல்லோரும் பயிற்சி எடுக்கும்போது நீங்களும் போய்ப் பயிற்சி எடுத்தீர்கள் என்றால் பொருத்தமில்லை என்று திருப்பி அனுப்பி விடுவார்கள். இப்போது பயிற்சி எடுக்க ஆளே இல்லை. தவிர, கரோனா சூழல் நிரந்தரமானதில்லையே? நான்கு மாதங்களுக்கு முன்னால் இருந்த இந்தியா, அதனுடைய எல்லாவிதமான கஷ்டங்களையும் தகர்த்தெறிந்துவிட்டு புத்துயிர் பெறக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறதே!

அப்படியென்றால் அடுத்த 3 மாதங்களில் கரோனா போய்விடும் என்கிறீர்களா?
4 மாதத்திற்கு முன்னால் இப்படியொரு வைரஸ் வரும் என்று நினைத்தோமா? அதே மாதிரிதான் இதுவும். 4 மாதத்திற்கு முன்பு ஒன்றை நினைக்காத மனிதன், 3 மாதங்கள் கழித்து அது போகும் என்று நம்பிக்கையோடு பேசுவதில் என்ன தவறு? தவிர, கரோனா முழுவதுவாகப் போய்விடும் என்று நான் சொல்லவில்லை. இன்றைக்கு உள்ள வீரியம் குறைந்துபோகும் என்றுதான் சொல்கிறேன். வீரியம் குறைந்தால் மக்களிடம் பயம் குறையும். பயம் குறைந்தால் சராசரி வாழ்க்கைக்கு வந்துவிடுவோம். அதிகமான விழிப்புணர்வும் வந்துவிடும்.

புதிதாகக் கடன் கொடுக்கவே கூடாது என்பதில் வங்கிகளும், வங்கிக் கடனைத் திருப்பிக் கட்டவே தேவையில்லை எனக் கடன் வாங்கியவர்களும் இருப்பதாகச் சொல்லப்படும் சூழலில், அதை மாற்ற என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

புதிதாக ஒரு செயல்பாடு வந்தது என்றால் பழைய செயல்பாடு அழிந்துபோகும். இப்போது நீங்கள் ஒரே ஒரு பத்துப் பேருக்கு மட்டும் முறையாக வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்து சரியாக வரவு- செலவு செய்ய வைத்தீர்கள் என்றால், கடன் வாங்கியவர்கள் திருப்பிக் கட்டுகிறார்கள் என்று வங்கிக்கு ஒரு நம்பிக்கை வரும். இன்னொரு 10 பேருக்குக் கடன் கொடுப்பார்கள். இந்தச் செய்தி பரவுகின்றபோது, கடனை திருப்பிக் கட்டத் தயங்கியவர்கள் சிந்திப்பார்கள். இது ஒரு நாளில் நடக்கிற சமாச்சாரம் அல்ல. ஆனால், கூடிய விரைவில் மாற்றம் வரும்.

இந்த இணையதளத்தை ஆரம்பித்த 15 நாட்களில் 20 ஆயிரம் பேர் கடன்கேட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள் இல்லையா? இவர்களில் எத்தனை பேருக்குக் கடன் வழங்கப்பட்டிருக்கிறது?

பல்லாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை ஓரிரு வாரத்தில் சரி செய்ய முடியாது. ‘பாஜககாரர்கள் என்றால் பெரிய கொம்பா? வெளியில போ!’ என்று சில வங்கி மேலாளர்கள் விரட்டத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களிடம்கூட, ‘பாஜககாரர்களாக எங்களைப் பார்க்காதீர்கள். உங்கள் வேலையைப் பாதியாகக் குறைத்து சேவை செய்யத்தான் நாங்கள் வருகிறோம். தகுதியான ஆட்களைத்தான் அழைத்துக்கொண்டு வருகிறோம்’ என்று சொல்லிப் புரிய வைக்கிறோம்.

‘கடன் கொடுப்பதும் கொடுக்காததும் உங்களுடைய இஷ்டம். ஆனால், கடன் கொடுத்து வசூலிக்கத்தான் பணம் வங்கிக்குள்ளே இருக்கிறது. நீங்களும் இருக்கீங்க’ என்பதைச் சொல்லவும் செய்கிறோம். இந்த விஷயத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரையோ, பிரதமர் மோடி பெயரையோ நாங்கள் எதற்குச் சொல்ல வேண்டும்? அப்படி யாராவது செயல்படுவது தெரிந்தாலே எங்களுடைய கட்சி எங்கள் மீது நடவடிக்கை எடுத்துவிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x