

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் மழையால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,481 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக - தமிழக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து நேற்று (ஜூன் 23) 1,285 கனஅடியாக இருந்தது.
இந்நிலையில், இன்று (ஜூன் 24) காலை 1,481 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் மட்டம் இன்று காலை 94.90 அடியாகவும், நீர் இருப்பு 58.50 டிஎம்சி-யாகவும் உள்ளது.
அணைக்கு வரும் நீர்வரத்தைக் காட்டிலும், நீர் திறப்பு அதிகமாக இருப்பதால், தொடர்ந்து அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. பருவமழை தீவிரம் அடைந்தால் மட்டுமே காவிரியாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து, மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.