Published : 24 Jun 2020 05:05 PM
Last Updated : 24 Jun 2020 05:05 PM

தனது பெயரில் போலி ட்விட்டர் பக்கம் தொடங்கி அவதூறு: காவல் ஆணையரிடம் வைகோ புகார் 

தனது பெயரில் போலி ட்விட்டர் பக்கம் தொடங்கி அவதூறான கருத்துகளைப் பதிவு செய்து, தனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக வைகோ காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் ஐடி சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழகத்தின் மூத்த அரசியல்வாதி. திமுகவில் பயணத்தைத் தொடங்கிய அவர் தனது ஆற்றல்மிக்க பேச்சால், நடவடிக்கையால் தொண்டர்களை ஈர்த்தவர். கட்சியில் மிக வேகமாக முன்னேறியவர். திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக பதவி வகித்தவர். நாடாளுமன்றத்தில் தனது ஆவேசமிக்க வாதத்தால் தேசியத் தலைவர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தவர்.

இந்திரா காந்தி, வாஜ்பாய், ஹர்கிஷன்சிங் சுர்ஜித், வி.பி.சிங் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களின் அன்பைப் பெற்றவர். உணர்ச்சிமிகு அரசியல்வாதி எனப் பெயர் எடுத்தவர். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மீது கொண்ட பற்றால் அவரை நேரில் சந்தித்துப் பேசியது திமுகவுக்குச் சிக்கலை ஏற்படுத்தியது. பின்னர் திமுகவிலிருந்து விலகிய வைகோ, மதிமுகவைத் தொடங்கினார்.

வாஜ்பாய் அரசில் தனக்கு வந்த மத்திய அமைச்சர் பொறுப்பை மறுத்தவர். விடுதலைப் புலிகளை ஆதரித்ததால் பொடாவில் கைதாகி ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தாலும் ஜாமீனில் வர விரும்பாதவர். சமீபத்தில் ஒரு வழக்கிலும் தேசத்துரோக குற்றச்சாட்டு இருந்தபோதும் தான் பேசியதை மறுக்கவில்லை. வேண்டுமானால் தண்டனை கொடுங்கள். ஆனால், நான் பேசியது சரியான ஒன்றுதான் என வாதாடியவர்.

வழக்கறிஞராக தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் என இவரது சட்டப் போராட்டமும், உச்ச நீதிமன்றத்தில் இவர் எடுத்து வைத்த வாதமும் வரலாற்றுப் புகழ்மிக்கது. வாழ்த்தினாலும், எதிர்த்தாலும் உறுதியோடு இருப்பவர். உலக நாடுகளின் தலைவர்களை அறிந்த இந்திய அரசியல்வாதிகளில் முக்கியமானவர்.

மதிமுக பொதுச்செயலாளராக வைகோவின் பங்கு தமிழகத்தில் முக்கியமான ஒன்று. அவரது பெயரை, புகழைக் கெடுக்கும் வகையில் சமீபகாலமாக அவரது பெயரில் வைகோ என ட்விட்டர் பக்கத்தை சில சமூக விரோதிகள் தொடங்கி அதில் அவரது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் வரும் வகையில் பதிவு செய்து வருவதை வாடிக்கையாகச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

இது மற்றவர்களுக்கு வைகோ மீதான நல் அபிப்ராயத்தைக் குலைக்கும் வகையிலும், கட்சிக்காரர்களிடையே குழப்பத்தையும் ஏற்படுத்தி வருவதை கட்சிக்காரர்கள் வைகோவின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

இதையடுத்து வைகோ தரப்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் சைபர் பிரிவு போலீஸார் 66 டி (இணையதளம் மூலம் மோசடி அவதூறு செய்தல்) பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x