

மதுரை அருகே காசநோய் சிகிச்சைக்கு பிரசித்திபெற்ற தோப்பூர் காசநோய் மருத்துவமனை தற்போது முழுமையாக ‘கரோனா’ மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதால், அங்கு உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற 150 காசநோயாளிகள் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 15 ஆண்டிற்கு முன் வரை காசநோய், தற்போது வந்துள்ள ‘கரோனா’ நோய் போல் தீண்டத்காத நோயாக பார்க்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளிலும் இந்த நோய்க்கு ஒரு ஒதுக்குப்புறமான இடத்தையே ஒதுக்கும் அளவிற்கு இந்த நோய்க்கான மருத்துவமும், இந்த நோயாளிகளும் புறக்கணிக்கப்பட்டிருந்தனர்.
உறவினர்களாலும், சொந்த ஊர்க்காரர்களும் புறக்கணிக்கப்படும் அளவிற்கு காசநோயாளிகள் பாதிக்கப்பட்டதால் அவர்கள் இந்த நோயை வெளியே சொல்ல முடியாமலும், சிகிச்சைக்கு கூட யாருக்கும் தெரியாமல் மருத்துவமனைக்கு வந்து செல்வார்கள்.
தற்போது இந்த நோய்க்கு சிறப்பு வாய்ந்த கூட்டு மருந்து சிகிச்சைகள் வந்துள்ளதால் 3 முதல் 6 மாதத்தில் இந்த நோயில் இருந்து நோயாளிகள் பூரண குணமடைகிறார்கள். ஆனால், இந்த நோயின் பரவல் விகிதமும், அதன் உயிரிழப்பும் குறைந்தபாடில்லை. தமிழகத்திலே இந்த காசநோய்க்கு மதுரை தோப்பூரில் உள்ள அரசு காசநோய் மருத்துவமனையில் சிறப்பு வாய்ந்த சிகிச்சை வழங்கப்படுகிறது.
காசநோய்க்கு மிகத் தீவிரமாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த மருத்துவமனையில்தான் தமிழகம் முழுவதும் இருந்து வந்து அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த மருத்துவமனை மதுரை திருமங்கலம் அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமாக தோப்பூரில் காட்டுப்பகுதியில் செயல்படுகிறது. ஆரம்பத்தில் இந்த மருத்துவமனை பராமரிப்பு இல்லாமல் இடிந்து விழும் அபாயத்துடன் பாழடைந்த கட்டிடங்கள், சுற்றுசுவர் இல்லாத தூர்நாற்றம் வீசும் வார்டுகள், மழைக்கு ஒழுகும் மேற்கூரைகள், குப்பை, மது பாட்டில் குவியல், பெயர்ந்த தரைகள், எங்கும் துருப்பிடித்த, எச்சில், ரத்தக்கறையுமாக இந்த மருத்துவமனை இருந்துள்ளது. அம்மை, காலரா, காச நோய் சிகிச்சைக்கு அழைத்து வரும் நோயாளிகளை அவர்கள் உறவினர்கள் அவர்களை அங்கே போட்டுவிட்டு ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு மிக மோசமாக காணப்பட்டது.
அதனாலேயே, இந்த மருத்துவமனை அப்பகுதியினரால் காட்டாஸ்பத்திரி என்று அழைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டிற்கு முன் இந்த காட்டாஸ்பத்திரி, காசநோய்க்கு உலக தரத்தில் சிகிச்சை அளிக்கக்கூடிய ஹைடெக் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது.
காசநோய் சிகிச்சைக்கு தமிழக அரசின் பாராட்டை பெற்ற இந்த மருத்துவமனையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காசநோயாளிகள் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சைப்பெற்றனர். அவர்களுக்கு கூட்டு மருந்துவ சிகிச்சையுடன் சுகாதாரமான சாப்பாடு, விளையாடுவதற்கு செஸ், கேரம்போர்டு, இறகுப்பந்து, பேட்மிட்டன் விளையாட உள் விளையாட்டு அரங்கம், பொழுதுபோக்க டிவி, எஃப்எம் ரேடியோ, மன அமைதிக்கு யோகா, நடைபயிற்சி செல்ல பசுமை போர்த்திய அடர்ந்த மரங்களின் நிழல் நடைப்பாதை, பூங்கா, புத்தகம் மற்றும் நாளிதழ்கள் படிக்க நூலகம், உறவினர்கள் வந்து செல்ல மருத்துவமனை வளாகத்திலே பஸ்நிலையம் என தனியார் மருத்துவமனைகளே இந்த மருத்துவமனையை தலை நிமிர்த்துப் பார்க்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருந்தது.
இந்நிலையில் ‘கரோனா’ மருத்துவமனை இந்த மருத்துவமனை செயல்பாட்டையும் முடக்கிப்போட்டுள்ளது. இந்த மருத்துவமனை 150 ‘கரோனா’ நோயாளிகள் சிகிச்சைப்பெறக்கூடிய வகையில் முழுமையாக ‘கரோனா’ மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது 140 கரோனா நோயாளிகள் இந்த ‘கரோனா’ மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அதேநேரத்தில் இந்த மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற காசநோயாளிகள் 150 பேர் எங்கே என்ற கேள்வி எழுந்துள்ளது. விசாரித்தபோது ‘கரோனா’ சிகிச்சைக்கு மட்டுமே தற்போது முக்கியத்துவம் கொடுப்பதாலும், தோப்பூர் காசநோய் மருத்துவமனை முழுமையாக ‘கரோனா’ மருத்துவமனையாக மாற்றப்பட்டதாலும் இங்கு சிகிச்சைப்பெற்ற காசநோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அவர்களுக்கு 2 முதல் 3 மாதம் வரையிலான மருந்துகள், ஆலோசனைகள் வழங்கி, மருந்து தீர்ந்து போனால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையம், அரசு மருத்துவமனைகளிலும் பெற்றுக் கொள்ளுமாறும் அறிவரை வழங்கி அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களில் தொடர் சிகிச்சை தேவைப்படும் உடல்நிலை மோசமாக இருந்த நோயாளிகள் 40க்கும் மேற்பட்டோர் தற்காலிகமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காசநோயாளிகளை பொறுத்தவரையில் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு மிக குறைவாகவே இருக்கும். எளிதில் அவர்களுக்கு எந்த தொற்று நோயும் பரவக்கூடும். அதனால், ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்ட காசநோயாளிகள், அங்கு கரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதால் அச்சமடைந்து அவர்களாகவே பலர் வீடுகளில் சென்று மருந்து மாத்திரைகள் சாப்பிட்டுக் கொள்கிறோம் என்று சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது அரசு மருத்துவமனையில் முழுக்க முழுக்க ‘கரோனா’ மருத்துவமனைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதால் மற்ற உயிர் காக்கும் சிகிச்சைகள், காசநோய் போல் தொடர் சிகிச்சைப்பெறுவோர் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ‘டீன்’ சங்குமணியிடம் கேட்டபோது, ‘‘தோப்பூர் காசநோய் மருத்துவமனையை ‘கரோனா’ சிகிச்சைக்கு மாற்றவதற்காகவே ஒரு மாதம் முன் அங்கு சிகிச்சைப்பெற்ற உள் நோயாளிகளை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள தனி வார்டுக்கு மாற்றினோம். தற்போது 25 காசநோயாளிகள் தொடர் சிகிச்சையில் உள்ளனர், ’’ என்றார்.