தூத்துக்குடியில் கரோனாவுக்கு மேலும் 2 பெண்கள் பலி: பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ தாண்டியது

தூத்துக்குடியில் கரோனாவுக்கு மேலும் 2 பெண்கள் பலி: பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ தாண்டியது
Updated on
1 min read

தூத்துக்குடியில் கரோனாவுக்கு மேலும் 2 பெண்கள் பலியாகியுள்ளனர். இருவருக்குமே இறந்த பிறகே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தூத்துக்குடியில் இதுவரை கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

கோவில்பட்டி பகுதியை சேர்ந்த 56 வயது பெண் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 22-ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடல் நிலை மோசமானதால் அன்று மாலையில் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லும் வழியில் அன்று மாலை 5.05 மணியளவில் அந்தப் பெண் உயிரிழந்தார். இதையடுத்து இறந்த அந்த பெண்ணின் சடலத்தில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த பெண்ணுக்கு கரோனா தொற்று இருந்தது இன்று காலை உறுதி செய்யப்பட்டது.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள அனியாபரநல்லூரை சேர்ந்த 57 வயது பெண்ணுக்கு கடந்த 22-ம் தேதி காலை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை, அவரது மகன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். ஆனால், வரும் வழியிலேயே அந்த பெண் பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து இறந்த அந்த பெண்ணின் சடலத்தில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அந்த பெண்ணுக்கும் கரோனா தொற்று இருந்தது இன்று காலை உறுதி செய்யப்பட்டது.

இந்த இரு பெண்களின் மரணத்தை தொடர்ந்து, தூத்துக்குடியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மேலும் 44 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கனவே 678 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை 722 ஆக அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in