Last Updated : 24 Jun, 2020 03:17 PM

 

Published : 24 Jun 2020 03:17 PM
Last Updated : 24 Jun 2020 03:17 PM

புதுச்சேரியில் கிராமங்கள்தோறும் சென்று ஆம்புலன்ஸ் மூலம் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தகவல்

புதுச்சேரியில் கிராமங்கள்தோறும் சென்று ஆம்புலன்ஸ் மூலம் கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஜூன் 24) அவர் கூறியதாவது:

"புதுச்சேரியில் தினமும் 300க்கும் குறைவான நபர்களிடமிருந்தே உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று (ஜூன் 23) அதிகபட்சமாக 441 பேரிடம் உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 59 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 276 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி 26 ஆம் தேதி முதல் கரோனா மருத்துவமனையாக செயல்படும். அங்குள்ள நோயாளிகள் அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்படுவார்கள். மேலும், புறநோயாளிகள் பிரிவும் இயங்காது.

கடந்த 3 மாதங்களாக மருத்துவர்கள், செவிலியர், ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றியதால் தற்போது சோர்வடைந்துள்ளனர். இதனால், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் அனைவரையும் பணியமர்த்த எழுத்துபூர்வமாக உத்தரவிட்டுள்ளேன்.

தனியார் மருத்துவக் கல்லூரியில் கூட கரோனா பரிசோதனை செய்வது தொடர்பாகப் பேசியுள்ளேன்.

புதுச்சேரியில் கிராமங்கள்தோறும் சென்று ஆம்புலன்ஸ் மூலம் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நாளை தொடங்க உள்ளோம். இதேபோல், காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களிலும் ஆம்புலன்ஸ் மூலம் பரிசோதனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அறிகுறி உள்ளவர்களுக்கும், 'பாசிட்டிவ்' அதிகம் உள்ள பகுதியில் இருப்போரை மட்டும் பரிசோதனை செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தற்போது அதிகம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதியில் உள்ளோருக்கும் பரிசோதனை செய்வதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஜிப்மர் இயக்குநரைச் சந்தித்துப் பேசினேன். அவரிடம் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினேன்.

காரைக்கால் ஜிப்மர் கிளை பணிகள் குறித்து விவாதித்தேன். அதேபோல், ஏனாமில் ஜிப்மர் கிளை தொடங்க வேலைக்கான ஆணை கொடுக்கப்பட்டுள்ளது. உடனே பணிகளைத் தொடங்க வேண்டும். கரோனா தொற்று சமயத்தில் முழு ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும் அவரிடம் கேட்டுக்கொண்டேன்.

ஏனாம் அருகில் உள்ள கிழக்கு கோதாவரி பகுதியில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு காலை 6 மணி முதல் 11 மணி வரை கடைகள் திறக்க ஆந்திர முதல்வர் உத்தரவிட உள்ளார். அதேபோல், ஏனாமிலும் 11 மணி வரை கடைகளைத் திறக்க உத்தரவிடப் போவதாக ஏனாம் நிர்வாகி தெரிவித்தார்.

அவரிடம், 'புதுச்சேரியைப் போல் ஏனாமிலும் காலை 7 மணி முதல் 2 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளியுங்கள். அதன் பிறகு வியாபாரிகளிடம் பேசிய முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளேன்".

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x