Published : 24 Jun 2020 02:31 PM
Last Updated : 24 Jun 2020 02:31 PM

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இடத்தில் தொழிற்சாலை: பொதுநல வழக்கில் அரசு, தொழிற்சாலை நிர்வாகத்தை எதிர் மனுதாரராகச் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை தமிழக அரசு குறைப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும், மருந்து தயாரிக்கும் சன் ஃபார்மா நிறுவனத்தையும் எதிர்மனுதாரராகச் சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் முக்கியச் சரணாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தச் சரணாலயத்திற்கு ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளிலிலிருந்து வெளிநாட்டுப் பறவைகள் வருகின்றன. நத்தை குத்தி நாரை, சாம்பல் நாரை, கூழைகடா, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை உட்பட 27 வகை பறவைகள் ஆண்டுதோறும் இனப்பெருக்கத்துக்காக வருகின்றன.

இப்படிப்பட்ட வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தொழிற்சாலைகள், கட்டிடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளதாகச் செய்திகள் வெளியாகின.

இரண்டு முக்கிய கம்பெனிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், அதை ரத்து செய்யவேண்டும் என்றும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர். மீறி அனுமதி அளித்தால் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.ஸ்டாலின் ராஜா என்பவர் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைப்பதற்குத் தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “ஒரு தனியார் மருந்து தொழிற்சாலையின் விரிவாக்கத்திற்காக இந்தச் சரணாலயத்தின் பரப்பளவை 5 கிலோ மீட்டரில் இருந்து 3 கிலோ மீட்டராக குறைத்து அறிவிப்பதற்கான கருத்துருவை தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் தேசிய விலங்குகள் நல வாரியத்துக்கு கடந்த மார்ச் 19-ம் தேதி அனுப்பியுள்ளார்.

தனியார் நிறுவனத்திற்காக சட்ட விதிகளுக்கு முரணாக இயற்கையாக அமைந்துள்ள சரணாலயத்தின் பரப்பளவைக் குறைப்பது தவறான செயலாகும். இதனால், சரணாலயத்திற்கு வரும் பறவைகளின் வரத்து குறைந்துவிடும். சம்பந்தப்பட்ட நிறுவனத்தால் தினமும் 1.76 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் குறைந்துவிடும். இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைத்து மாற்றி அறிவிப்பதற்கும், தொழிற்சாலையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கும் தடை விதிக்க வேண்டும். விதிமுறைகளுக்கு முரணாக சரணாலயப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று வழக்கறிஞர் எஸ்.ஸ்டாலின் ராஜா கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, “பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் விளம்பரத்திற்காக இந்த வழக்குத் தொடரப்பட்டதாகவும், மேலும், அந்தப் பகுதியில் இயங்கும் தனியார் நிறுவனங்களையும், மத்திய அரசையும் எதிர்மனுதார்களாகச் சேர்க்கவில்லை” என்றும் தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், விளம்பரத்திற்காக இந்த வழக்குத் தொடர்ந்திருந்தால் 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மனுவைத் தள்ளுபடி செய்ய நேரிடும் என எச்சரித்தனர்.

மேலும், இந்த வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தையும், சன் ஃபார்மா மருந்து நிறுவனத்தையும் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x