

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சிப் பள்ளிகளில் தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் ஜூன் 23-ம் தேதி வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 352. இதில் மாநகரப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் 231. குறிப்பாக, கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஊரகப் பகுதியைக் காட்டிலும் மாநகரப் பகுதியில் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின்பேரில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கரோனா தடுப்பு முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, திருச்சி மாநகராட்சியின் 4 கோட்டங்களிலும் தலா ஒரு தனிமைப்படுத்தும் முகாம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சிப் பள்ளிகளில், படுக்கை வசதி அமைப்பதற்காக கட்டில்கள், மெத்தைகள், தலையணைகள், விரிப்புகள் ஆகியவற்றை அந்தந்தப் பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் மாநகராட்சி நிர்வாகத்தினர் கொண்டு சென்றனர்.
ஆனால், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கவே இந்தப் பள்ளிகளைத் தயார் செய்வதாக கருதி, எடமலைப்பட்டிப்புதூர், ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதி, விமான நிலைய வயர்லெஸ் சாலை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் கேட்கவில்லை.
இதனிடையே, திருச்சிக்கு நாளை மறுநாள் (ஜூன் 26) முதல்வர் வரவுள்ள நிலையில், தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனிமைப்படுத்தும் முகாமுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தியதாக 3 பகுதிகளையும் சேர்ந்த 134 பேர் மீது அந்தந்த காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கும் மாநகராட்சியின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது வேதனை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
"நோயாளிகளிடம் கனிவுடனும், அதேவேளையில், நோய் தொற்றாத வகையில் கவனமாக தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கரோனா நோய்ப் பரவல் தடுப்பு தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்கள், அறிவுரைகளைக் கூறியுள்ளது. அவற்றை மாறாமல் பின்பற்றினாலே கரோனா நம்மைத் தொற்றிவிடாமல் தற்காத்துக் கொள்ள முடியும். அவ்வாறின்றி, கரோனா தனிமைப்படுத்தும் மையம் அமைப்பதை எதிர்ப்பது அரசின் நடவடிக்கைகளுக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது" என்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் கூறும்போது, "திருச்சி மாநகரில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அந்தந்தப் பகுதியிலேயே தனிமைப்படுத்தி கண்காணிக்கவே இந்த மையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அவை, கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்கள் அல்ல. அரசு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
மாநகராட்சி நிர்வாகம் முதலில் தன்னிடம் உள்ள கட்டமைப்புகளையும், அதன் பிறகு தேவையென்றால் மட்டுமே வெளியிடங்களையும் தேர்வு செய்ய முடியும். குறிப்பாக, தற்போது பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கவுள்ள பள்ளிக்குள் நுழைய பொதுமக்களுக்கு அவசியம் இல்லாத நிலையில், தொற்று பரவும் என்ற அச்சமும் வேண்டாம்".
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு கூறும்போது, "கரோனா நோய் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வர அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அலுவலர்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் இதை உணர்ந்து அரசின் கரோனா தடுப்பு - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான் கரோனா பரவாமல் தடுக்க முடியும்" என்றார்.