

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு விடுப்பில் சென்றதால் புதிய டீனாக தேரணிராஜன் நியமிக்கப்பட்டார். அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆசியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனை ஆகும். தினசரி பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சென்னை தவிர அண்டை மாநிலங்கள், ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
ஏழு அடுக்குகள் கொண்ட இரண்டு புதிய அடுக்குமாடிக் கட்டடங்கள் கொண்ட பிரம்மாண்ட மருத்துவமனையாக 2005-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கரோனா தொற்று ஆரம்பமானது முதல் சென்னையில் முதன்முதலில் கரோனா சிறப்பு வார்டு இங்கு அமைக்கப்பட்டது.
ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனாக ஜெயந்தி பணியாற்றி வந்தார். சென்னையில் கரோனா பரவ ஆரம்பித்தது முதல் உச்சத்தை அடைந்தது வரை சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன் முன்னணியில் நின்று பணியாற்றிய மூத்த செவிலியர்கள் இருவரைக் கரோனா பலி கொண்டது.
மருத்துவர்கள், ஊழியர்கள் எனப் பலர் பாதிக்கப்பட்டனர். இறுதியில் டீன் ஜெயந்தியே பாதிக்கப்பட்டார். இதனால் அவர் தனிமைப்படுத்துதலில் உள்ளார். அவர் விடுப்பு எடுத்ததால் மருத்துவமனை பணிகள் பாதிக்காமல் இருக்க சென்னை மருத்துவக் கல்லூரி ஹெபடாலஜி பிரிவு இயக்குனரும், பேராசிரியருமான நாராயணசாமி தற்காலிக டீனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குப் புதிய டீனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகள் நல மருத்துவர் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜன் புதிய டீனாக நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மருத்துவமனை, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றியவர் தேரணிராஜன். அவர் இன்று அதிகாரபூர்வமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீனாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் மருத்துவக் கல்லூரியின் இயக்குனராகவும் பொறுப்பு வகிப்பார்.