

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் சாத்தான்குளம் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதில் மரணமடைந்தார்கள். இதற்குப் பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பும் கண்டனமும் எழுந்துள்ள நிலையில் இருவரின் மரணத்துக்குக் காரணமான இரண்டு உதவி ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் காவல் துறையின் அராஜகப் போக்கைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். செல்போன் வணிகர்கள் சங்கத்தினரும் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் இன்று கடையடைப்புக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். இதனால் இன்று தமிழகத்தில் பெரும்பாலான செல்போன் கடைகள் இயங்கவில்லை.
இந்த நிலையில், நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த செல்போன் கடைக்காரர் ஒருவர், வாட்ஸ் அப் மூலம் சக செல்போன் வணிகர்களிடம் கடையடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு பதிவு ஒன்றை இட்டிருக்கிறார். அதில், ''இன்றைய காலை விடிந்தது, ஆனால், நமது மொபைல் சொந்தங்களில் ஒருவரும், அவரது தந்தையும் இன்று நம்மிடம் இல்லை. மனது வலிக்கிறது. போரில் இறந்தால்கூட வீரமரணம் எனப் பெருமை கொள்ளலாம். ஆனால் இப்படி..?
ஒரு தாய் மற்றும் மூன்று சகோதரிகளை அநாதையாக விட்டுவிட்டு அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம் இன்று மறைந்துவிட்டது. கடந்த மூன்று மாதங்களாக கரோனாவால் கடைகளை அடைத்து அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தோம். இப்போது தினமும் பசிக்காக மட்டுமே கடைகளைத் திறக்கும் அவலத்திலும் இரண்டு உயிர்கள் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளன.
இத்தனை நாட்கள் நமக்கு யாருமே இல்லை என நினைத்து ஏமாந்துவிட்டோம். நேற்று முதல் எத்தனையோ பேர், நம் துயரத்தைத் தன் துயரமாக நினைத்துப் பகிர்கிறார்கள். இன்று, உணர்வுள்ள ஒவ்வொரு மொபைல் கடைக்காரரும் நம் ஒற்றுமையை உலகுக்குக் காட்ட வேண்டிய தருணம். ஒன்றுபட்டு நம் கடைகளை அடைத்து இனி நம் உறவுகள் ஒன்றைக் கூட இழக்கக்கூடாது என அனைவருக்கும் காட்டுவோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.