

சென்னை மாநகராட்சி முழுவதும் கரோனா தொற்று உள்ளது என்ற புரளியை நம்ப வேண்டாம் என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னையில் இன்று (ஜூன் 24) அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. அதில், வெகுவிரைவில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 37 ஆயிரம் தெருக்கள் இருக்கின்றன. இதில் 7,300 தெருக்களில்தான் கரோனா தொற்று பாதிப்பு உள்ளது. எனவே, கரோனா தொற்று சென்னை மாநகராட்சி முழுவதும் இருக்கிறது என்ற புரளியை நம்ப வேண்டாம்.
முழு ஊரடங்கு காலத்தில் ரூ.1,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டார். வீடு, வீடாக நிவாரணத் தொகையை வழங்கி வருகிறோம். 56.8% குடும்ப அட்டைகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு 70-75% கொடுத்து முடித்துவிடுவோம்.
நியாய விலைக் கடைகளுக்கு அழைத்து நிவாரணத் தொகை வழங்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளோம். அதனை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் உத்தரவை நியாய விலைக் கடை ஊழியர்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்களும் கடைகளில் கூடக்கூடாது"
இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.