

கரோனா தொற்றுக்கு திருப்பூர் மாவட்டத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர், திருப்பூர் மாவட்டம் மங்கலத்தில் தங்கி, அவிநாசிபாளையத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 18-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியவில்லை.
இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கடந்த ஒரு வார காலமாக சிகிச்சை எடுத்து வந்தவரின் உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில், இன்று (ஜூன் 24) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது குடும்பத்தினருக்கு சுகாதாரத்துறையினர் தகவல் அளித்தனர். அவரது சடலத்தை சுகாதாரத்துறை விதிகளின்படி, அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 120 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 116 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இந்நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஊழியரான இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் விதமாக, 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.