

ஜெயங்கொண்டம் அருகே, தினந்தோறும் மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்த கணவனை கட்டிப்போட்டு காதில் மருந்தை ஊற்றி கொலை செய்த மனைவி, மகன், தாய் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் மேலவெளி கிராமம் செக்கடி தெருவைச் சேர்ந்தவர் சேகர் என்கின்ற ராஜசேகர் (50). ஓட்டுநரான இவருக்கு மதுப்பழக்கம் உள்ளதால், அடிக்கடி மது அருந்திவிட்டு குடும்பத்தில் தகராறு செய்வதுடன் மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் தகராறு செய்து வந்ததாகவும், மேலும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தாமாகவே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 23) இரவு மதுபோதையில் ராஜசேகர், மனைவி, தாய், மகனிடம் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மனைவி சுகுணா (40), மகன் ரவிவர்மன் (23), தாய் செல்வி (70) ஆகியோர் சேர்ந்து ராஜசேகரை கட்டிப்போட்டு காதில் மருந்து ஊற்றி கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ராஜசேகரின் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ராஜசேகரின் மனைவி சுகுணா, தாய் செல்வி, மகன் ரவிவர்மன் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.