

அரசுதான் கரோனாவை தோற்றுவித்ததுபோல் அறிக்கை விட்டு மக்களை குழப்புவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கரோனா கட்டுப்பாடு குறித்த முதல்வர் பழனிசாமியின் பேட்டியை விமர்சித்ததுடன், கரோனா எண்ணிக்கையை மறைப்பதால் முதல்வர் நல்லபெயர் வாங்க முடியாது என்று குற்றம்சாட்டியும் அறிக்கை வெளிட்டிருந்தார். இதற்கு பதிலளித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின், கரோனா காலத்தில் மலிவான அரசியல் நடத்தி தன் இருப்பையும் தமிழக மக்கள் மீது அவருக்கு இருக்கும் வெறுப்பையும் காட்டி வருகிறார். கரோனா தொற்றுக்கு எதிராக மனிதகுலம் மன்றாடி வரும் நிலையில், அயராத போராட்டம், முயற்சி, அரசியல் கலப்பற்ற உழைப்பால் தமிழக மக்களை காக்கவும், நோயிலிருந்து மீட்கவும் தமிழக அரசு பணியாற்றி வருகிறது.
இதையெல்லாம் பாராட்ட மனமின்றி, இரவு பகல் பாராமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் மனச்சோர்வு அடையும் வகையில், ஸ்டாலின் வெளியிடும் அறிக்கைகள் மக்களின் முகச்சுளிப்புக்கு ஆளாகியுள்ளது. இதை மறைக்க கொள்முதல் செய்து முடிக்காத மருந்துகள், மருத்துவ உபகரணங்களில் முறைகேடு என்று அவதூறு பரப்புகிறார்.
கரோனாவுக்கு எதிராக தொண்டாற்றுவதில் நாட்டுக்கே வழிகாட்டும் மாநிலம் தமிழகம் என்ற பெருமையுடன் முதல்வர் பழனிசாமிக்கு மக்களிடம் உயர்ந்து வரும் செல்வாக்கை காணப் பொறுக்காத ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சி காரணமாக இதுபோன்று செயல்படுகிறார். அவர் அரசை குற்றம் சுமத்தி விடுக்கும் அறிக்கைகள் அனைத்துமே அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வெளியிடப்பட்டவை என்பது பட்டவர்த்தமாக தெரிகிறது.
கரோனாவை எப்போது கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு முதல்வர் இறைவனுக்குத்தான் தெரியும் என்று எதார்த்தமாக தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு, இந்திய சுகாதாரத்துறை, மருத்துவ நிபுணர்கள் அனைவருமே இந்த வைரஸ் தொற்றை ஒழிப்பது குறித்து கால அளவினை குறிப்பிடவில்லை. ஒழிக்க மருந்தும் கண்டுபிடிக்கவில்லை.அதனால் தான் முதல்வர் இந்த கருத்தை தெரிவித்தார். இதில் என்ன தவறு உள்ளது. முதல்வர் தெய்வ பக்தி உள்ளவர். ஸ்டாலினுக்கு கடவுள் பெயரை சொன்னாலே கோபம் வரும். அதன் வெளிப்பாடுதான் அவரது அறிக்கையாகும்.
மேலும், விமானம், ரயில் வழியாக வந்திறங்கிய பயணிகள், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் மீது முதல்வர் பழிபோட்டார் என்று அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸ் தமிழகத்தில் உருவானதல்ல என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.
வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் வந்தவர்கள், தமிழகத்தில் இருந்து டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் மூலம் தான் தமிழகத்தில் ஆரம்பத்தில் பரவியது. இதை மறைத்து, முதல்வரை பற்றி ஸ்டாலின் அவதூறு வெளியிடுவது கண்டனத்துக்குரியது.
அரசுதான் நோயை தோற்று வித்ததுபோல் அறிக்கை விட்டு மக்களை குழப்புவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார். கரோனாவை எப்போது கட்டுப்படுத்த முடியும் என்பதற்கு முதல்வர் இறைவனுக்குத்தான் தெரியும் என்று எதார்த்தமாக தெரிவித்துள்ளார். இதில் என்ன தவறு உள்ளது. முதல்வர் தெய்வ பக்தி உள்ளவர். ஸ்டாலினுக்கு கடவுள் பெயரை சொன்னாலே கோபம் வரும். அதன் வெளிப்பாடுதான் அவரது அறிக்கையாகும்.