சென்னை விருகம்பாக்கத்தில் கொசுத் தொல்லையால் வரும் காய்ச்சல்: கோவிட்-19 ஆக இருக்குமோ என மக்கள் அச்சம்

சென்னை மேத்தா நகர், வட அகரம் சாலையின் குறுக்கே செல்லும் விருகம்பாக்கம் கால்வாயில் தேங்கியிருக்கும் குப்பை. படம்: டி.செல்வகுமார்
சென்னை மேத்தா நகர், வட அகரம் சாலையின் குறுக்கே செல்லும் விருகம்பாக்கம் கால்வாயில் தேங்கியிருக்கும் குப்பை. படம்: டி.செல்வகுமார்
Updated on
1 min read

விருகம்பாக்கத்தில் கொசுத் தொல்லை அதிகரிப்பால் வரும்காய்ச்சல், கோவிட்-19 ஆக இருக்குமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுப் பரவல் மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. வீடுகளின் சுற்றுச்சூழலையும், மக்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ளச் சொல்லும் சென்னை மாநகராட்சி, நகரின் மையப்பகுதியில் ஓடும் விருகம்பாக்கம் கால்வாயில் தேங்கியுள்ள குப்பையை கடந்த 8 மாதங்களாக அகற்றவில்லை. இக்கால்வாய், சின்மயா நகரில் தொடங்கி, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம் வழியாக 6.4 கிலோ மீட்டர் தூரம் ஓடி, மேத்தா நகர் - நெல்சன் மாணிக்கம் சாலையின் குறுக்கே செல்லும் கூவம் ஆற்றில் கலக்கிறது. குப்பை அகற்றப்படாததால் கழிவுநீர் தேங்கி கொசுத் தொல்லைஅதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் மர்ம காய்ச்சலால் மக்கள்அவதிப்படுகின்றனர். இந்த காய்ச்சல் கோவிட்-19 ஆக இருக்குமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து மேத்தா நகரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் கூறும்போது, “விருகம்பாக்கம் கால்வாயில் தேங்கியிருக்கும் கழிவுநீர், குப்பையால் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லை அதிகரிப்பால் மேத்தா நகர், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், பெரியார் பாதை, அண்ணா நெடும்பாதை ஆகிய பகுதிகளில் மலேரியா, டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் பரவலாகக் காணப்படுகிறது.

இது கோவிட்-19 ஆக இருக்குமோ என்று மக்கள் அச்சப்படுகின்றனர். கால்வாயில் டன் கணக்கில் தேங்கியுள்ள குப்பையை உடனடியாக அகற்றி மக்களை கொசுக்கடி, மர்ம காய்ச்சல் மற்றும் கரோனா பீதியில் இருந்து காப்பாற்ற வேண்டும்” என்றார். டி.செல்வகுமார்


அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in