

திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை மொத்த வியாபாரிகளுக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், திருமழிசையில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால், காய்கறி சந்தை முழுவதும் தண்ணீர் தேங்கியது. கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து, வளாகம் முழுவதும் சேறும் சகதியுமானது. இதனால், காய்கறிகளை ஏற்றி வந்த வாகனங்கள் சேற்றில் சிக்கின. பின்னர் பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு வாகனங்கள் மீட்கப்பட்டன.
இது தொடர்பாக, கோயம்பேடு வணிக வளாக அனைத்து காய்கறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன் கூறியதாவது:
ஒருநாள் மழைக்கே திருமழிசை காய்கறி சந்தை தண்ணீரில் மூழ்கியது. இதனால், காய்கறி மூட்டைகளை இறக்கி வைக்க முடியாமல் வியாபாரிகள் கடும் சிரமங்களை சந்தித்தனர். பல மூட்டை காய்கறிகள் தண்ணீரில் நனைந்து அழுகின. மேலும், வழக்கமாக நடைபெறும் வியாபாரத்தில் 30 சதவீத பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கோயம்பேடு சந்தையில் செய்து மொத்த வியாபாரத்துக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். இல்லையென்றால் திருமழிசை சந்தையில் கான்கிரீட் சாலைகளை போட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அவர்களும் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் என்றார்.