

வங்கி மேலாளர் பேசுவதாகக் கூறிசென்னையில் பலருக்கு மோசடிபோன் அழைப்புகள் வருகின்றன.இதுகுறித்து வங்கி மோசடி தடுப்புபிரிவு போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வங்கி வாடிக்கையாளர்களின் பெயர், தொலைபேசி எண்களை தெரிந்து வைத்துக் கொண்டு சில மர்ம நபர்கள், ‘வங்கியிலிருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களது டெபிட், கிரெடிட் கார்டு காலாவதியாக போகிறது. உடனே புதுப்பிக்காவிட்டால், கார்டு செயலிழந்து விடும்’என்று கூறி, கார்டு எண், ரகசிய எண்விவரத்தைக் கேட்கின்றனர்.
பிறகு, போலி கார்டு தயாரித்து, வாடிக்கையாளரின் கணக்கில் இருந்த பணத்தை எடுத்து மோசடிசெய்துவிடுகின்றனர். இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் உள்ள பலரது செல்போன் எண்ணுக்கு ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணிலிருந்து (62898 05842), வங்கியில் இருந்து மேலாளர் பேசுவதாகக் கூறி தொடர் அழைப்புகள் வருவதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தகாவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், வங்கி மோசடி தடுப்பு பிரிவுபோலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்கள் சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.