

மதுரையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அன்டை மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பொதுப்போக்குவரத்து எப்படி இயங்கும் என்ற விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் நாளை அதிகாலை முதல் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.
இதில், மாநகர எல்லைப்பகுதி, கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குப்பட்ட பகுதிகள் மற்றும் பரவை பேரூராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள மதுரையில் பொது ஊரடங்கு எப்படியிருக்கும் என்று ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
ஊரடங்கு 30ம் தேதி நள்ளிரவு வரை நீடிக்கும் என்பதால் ஊரடங்கு அறிவித்த பகுதிகளில் பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. அதேநேரத்தில் அன்டை மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பொதுபோக்குவரத்து மாவட்டத்தில் குறிப்பிட்ட எல்லை வரையே இயக்கப்படும்.
அதனால், சாத்தூர், சிவகாசி, ராஜபாளையத்தில் இருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள், திருமங்கலம் வரை மட்டுமே இயக்கப்படும். அருப்புக்கோட்டையிலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள், காரியாப்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும்.
ராமநாதபுரம், மானாமதுரை மார்க்கத்தில் இருந்து மதுரை இயக்கப்படும் பஸ்கள் அனைத்தும் திருப்புவணம் வரை மட்டுமே இயக்கப்படும்.
சிங்கம்புனரி, கொட்டாம்பட்டி மற்றும் திருப்பத்தூர் மார்க்கத்திலிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள் மேலூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
நத்தம் பகுதியில் இருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும் கடவூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திண்டுக்கல்லிருந்து மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள் வாடிப்பட்டி வரை மட்டுமே இயக்கப்படும். தேனி, உசிலம்பட்டி வழியாக மதுரை மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள் செக்காணூரனி வரை மட்டுமே இயக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.