

மதுரையில் சென்னையைப் போல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் காய்கறி வாங்க மக்கள் குவிந்ததால் அதன்விலை உச்சத்திற்கு சென்றது. ஒரு கிலோ தக்காளி ரூ.70 க்கு விலை வரை உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
மதுரையில் ‘கரோனா’ தொற்று மிக அதிகளவில் பரவுவதால் நாளை முதல் சென்னையை போல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், மக்கள் இந்த ஊரடங்கு காலத்தில் வெளியே போகாமல் இருக்க காய்கறிகள், மளிகைப்பொருட்கள் வாங்க நேற்று முன்தினம் முதலே கடைகளில் குவிந்தனர்.
பொதுவாக ஊரடங்கு அறிவிக்கும்போது மக்கள் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை பொறுமையுடன் வாங்குவதற்கு 2 முதல் 3 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்படும். ஆனால், ஒரே ஒரு நாள் அவகாசமே கொடுத்துவிட்டு தமிழக அரசு மதுரையில் முழுஊரடங்கை அறிவித்துள்ளது.
அதனால், மக்கள் ஊரடங்கில் காய்கறிகள், மளிகைப்பொருட்கள் கிடைக்கிறதோ இல்லை என்ற பதட்டத்தில் அவற்றை வாங்குவதற்கு கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் ஒரே நேரத்தில் குவிந்தனர். குறிப்பாக காய்கறி கடைகளில் மக்கள் திருவிழா போல் நெருக்கடித்துக் கொண்டு முககவசம் போட்டும், போடாமலும் காய்கறிகள் வாங்க முண்டியத்தனர். மக்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் காய்கறிகள் விலை மதுரையில் திடீரென்று உயர்ந்தது.
இதுவரை ரூ.20 முதல் 30 வரை விற்ற தக்காளி ஒரே நாளில் விலை உயர்ந்து ரூ.60 முதல் ரூ.70 வரை விற்பனையானது. ஆனால், தக்காளி அந்த விலைக்கான தரம் இல்லாமல் மிக மோசமாகவே காணப்பட்டது.
ரூ.20க்கு விற்ற பெரிய வெங்காயம், ரூ.40க்கும், ரூ.40க்கு விற்ற பெரிய வெங்காயம் ரூ.70க்கும், ரூ.40க்கு விற்ற உருழைகிழங்கு ரூ.70க்கும், ரூ.50க்கு விற்ற பீன்ஸ் ரூ.80 முதல் ரூ.100க்கும், ரூ.40க்கு விற்ற காரட் ரூ.80 முதல் ரூ.100க்கும் விற்றது.
ரூ.25க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40க்கும், ரூ.25க்கு விற்ற கத்திரிக்காய் ரூ.45க்கும், ரூ.30க்கு விற்ற பிட்ரூட் ரூ.60க்கும் விற்றது.
அதுபோல், மளிகைப்பொருட்கள், மற்ற உணவுப்பொருட்கள் விலையையும் வியாபாரிகள் ஊரடங்கை பயன்படுத்தி கூடுதல் விலைக்கு விற்றனர்.
மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் முருகன் கூறுகையில், ‘‘வழக்கமாக 5 கிலோ காய்கறி வாங்கியவர்கள் ஊரடங்கால் 10 கிலோ வாங்கினர். 1 மூடை வாங்கும் சிறு வியாபாரிகள் 2 மூடை வாங்கிக் கொண்டனர்.
சில்லறை காய்கறி வியாபாரிகள் லாரி, வேன், ஆட்டோக்களை கொண்டு வந்து வியாபாரிகள் ஊரடங்கில் காய்கறி கிடைக்குமோ கிடைக்காதோ என்று மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொண்டனர். தற்போது சந்தைக்கே
காய்கறிகள் வரத்து குறைவாக இருந்தது. ஆனால், ஊரடங்கால் அதன் தேவையும், விற்பனையும் திடீரென்று அதிகரித்தால் விலை உயர்ந்தது. கடந்த ஒரு மாதமாக வெண்டைக்காய் வாங்க ஆள் இல்லாமல் சீரழிந்தது. அதுவே ரூ.30 முதல் ரூ.40 வரை விற்றது, ’’ என்றனர்.