

கருகும் சம்பா பயிரைக் காப் பாற்ற வலியுறுத்தி, இடதுசாரி கட்சிகளின் விவசாய சங்கங்கள் சார்பில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நேற்று ரயில், சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்ட 3,300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தமிழத்துக்கு உரிய நீரை பெற்றுத் தர வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் நேற்று மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை ஆதரவு தெரிவித்திருந்தன.
தஞ்சாவூர் மாவட்டத்தில்…
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநில நிர்வாகிகள் வே.துரைமாணிக்கம், கே.முகமது அலி உள்ளிட்டோர் நேற்று காலை தஞ்சாவூரில் சோழன் விரைவு ரயிலை மறிக்கச் சென்றனர். ரயில் மறியலுக்கு முயன்ற 27 பேரும், கும்பகோணத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சையில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுகவி னர் உள்ளிட்ட 60 பேரும் திருவிடை மருதூர், பாபநாசம், ஒரத்தநாடு, பூதலூர், திருவை யாறு, பட்டுக் கோட்டை உள்ளிட்ட 49 ஊர்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 948 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மன்னார்குடி, பேரளம், நீடாமங்கலம், கொரடாச்சேரியில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரும், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்ளிட்ட 42 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட 832 பேரும் கைது செய்யப்பட்டனர். நாகை மாவட்டத்தில் 97 பேரும், மயிலாடுதுறை 150 பேரும் கைது செய்யப்பட்டனர்.