

கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடலை 3 மருத்துவர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோவில் பதிவு செய்யவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த செல்வராணி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நாங்கள் சாத்தான்குளம் சந்தை பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறோம். கடந்த 19-ம் தேதி இரவு கடையை விரைவாக அடைக்குமாறு கூறிய சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகுகணேஷ் மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் என் கணவர் ஜெயராஜை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
தகவல் தெரிந்து என் மகன் பென்னிஸ் காவல் நிலையம் சென்றார். அவரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர் போலீஸார் இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது கரோனா தொற்று காரணமாக நீதிபதியை நேரில் பார்க்க முடியாததால் போலீஸார் தாக்கியதை நீதிபதியிடம் தெரிவிக்க முடியவில்லை.
போலீஸாரால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் என் மகன் 22-ம் தேதி இரவு 9.30 மணியளவிலும், நேற்று காலை 4.30 மணியளவில் என் கணவரும் உயிரிழந்தனர். தற்போது இருவரின் உடலும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. இருவரின் உடலையும் மூன்று மருத்துவர்களுக்கு குறையாத மருத்துவக்குழு அமைத்து பிரேத பரிசோதனை செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும், வீடியோ பதிவு மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. தந்தை, மகன் உடலையும் 3 மருத்துவர்கள் அடங்கிய குழு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும், பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.