புதுச்சேரி முதல்வர் தொகுதியில் சாலைகள் மோசம் என புகார்; பொதுப்பணித்துறையிடம் கூட்டணி கட்சி திமுக மனு

பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் மகாலிங்கத்திடம் மனு தருகிறார் நெல்லித்தோப்பு திமுக தொகுதி செயலாளர் நடராஜன்.
பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் மகாலிங்கத்திடம் மனு தருகிறார் நெல்லித்தோப்பு திமுக தொகுதி செயலாளர் நடராஜன்.
Updated on
1 min read

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொகுதியான நெல்லித்தோப்பில் பல பகுதிகளில் சாலைகள் மோசமாக உள்ளதாக பொதுப்பணித்துறையிடம் கூட்டணி கட்சியான திமுகவினர் குற்றம்சாட்டி மனு தந்துள்ளனர்.

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு திமுக ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. காங்கிரஸ் அரசு தொடர்பாக சட்டப்பேரவையிலும், வெளியிலும் திமுக தரப்பு தங்களின் குற்றச்சாட்டுகளை தெரிவிப்பது வழக்கம்.

இச்சூழலில், முதல்வர் நாராயணசாமி தொகுதியான நெல்லித்தோப்பில் சாலைகள் மோசமாக உள்ளதாக குற்றம்சாட்டி புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் மகாலிங்கத்திடம் நெல்லித்தோப்பு திமுக தொகுதி செயலாளர் நடராஜன் மனு கொடுத்துள்ளார்.

அதன் விவரம்:

"நெல்லித்தோப்பு தொகுதி குயவர்பாளையத்திற்குட்பட்ட சாத்தாணி வீதி, வ.உ.சி. வீதி, பிள்ளையார் கோவில் வீதி, செல்லபெருமாள் கோவில் வீதி, திருமால் நகர் மூன்றாவது குறுக்கு தெரு வடக்கு பகுதி ஆகிய புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான தெருக்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் பொதுப்பணித்துறை மூலமாக நடைபெற்றது. பணி முடிந்தவுடன் சாலை போடாமல் விட்டுவிட்டார்கள். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக இப்பகுதி குண்டும்குழியுமாக உள்ளது. பொதுமக்கள், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

இது குறித்து பல முறை பொதுப்பணித்துறை பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளும் உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் நேரிலும், கடிதம் மூலமும் சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பொதுமக்களின் நலன் கருதி மிக மோசமாக உள்ள மேற்கண்ட வீதிகளை மக்கள் பயன்படுத்தும் வகையில் சரி செய்து தர வேண்டும்"

இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in